5 போட்டியில் தொடர்ச்சியான அடி.. வேறு யாரும் செய்யாத இரட்டை உலக சாதனை படைத்த சிக்கந்தர் ராசா

Sikander Raza
- Advertisement -

இலங்கைக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் ஜிம்பாப்வே ஏமாற்ற தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. அதில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 143/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்து 62 (42) ரன்கள் குவித்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்சனா மற்றும் கேப்டன் வணிந்து ஹஸரங்கா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 144 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷாங்கா 2, குசால் மெண்டிஸ் 17, குசால் பேரரா 17, சமரவிக்ரமா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

தனித்துவ உலக சாதனைகள்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் ஏஞ்சலோ மேத்யூஸ் அனுபவத்தை காட்டி 46 (38) ரன்களும் தசுன் சனாகா 26* (18) ரன்களும் எடுத்தனர். அதனால் கடைசி பந்தில் இலங்கை போராடி வென்றதால் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராசா இந்த போட்டியையும் சேர்த்து கடைசி 5 சர்வதேச டி20 போட்டிகளில் முறையே 62 (42), 65 (42), 82 (48), 65 (37), 58 (36) ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தொடர்ந்து 5 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் 62 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் அயர்லாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடிய கடந்த டி20 போட்டியில் 65 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த முதல் வீரர் என்ற மற்றுமொரு உலக சாதனையையும் சிக்கந்தர் ராசா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஷிவம் துபே அவுட்டாகாம 63 ரன் அடிச்சும், அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதினை பெற்றது ஏன்? – காரணம் இதோ

சமீப காலங்களாகவே மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்து ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு உதவியதை மறக்க முடியாது. அதன் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடத் தேர்வான அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பது மட்டுமே ஜிம்பாப்வே அணிக்கு ஆறுதலாக இருக்கிறது.

Advertisement