ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது உலக முழுவதிலும் தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆப்பிரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் அக்டோபர் 23ஆம் தேதி ஜிம்பாப்வே – கம்பியா அணிகள் நைரோபியில் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே முரட்டுத்தனமாக அடித்து 344-4 ரன்கள் குவித்தது.
கம்பியா அணி சர்வதேச அரங்கில் பெரியளவில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை. அதனால் சுமாராக பந்து வீசிய அந்த அணிக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கிய ஜிம்பாவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா சதமடித்து 7 பவுண்டரி 15 சிக்ஸருடன் 133* (43) ரன்கள் குவித்தார்.
உலக சாதனை:
குறிப்பாக 33 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 35 பந்துகளில் சதமடித்திருந்தனர். தற்போது அந்த சாதனையை சிக்கந்தர் ராசா உடைத்துள்ளார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். பின்னர் விளையாடிய கம்பியா அணியை வெறும் 54 ரன்களுக்கு சுருட்டிய ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையும் ஜிம்பாப்வே படைத்தது.
மிரட்டிய ராசா:
இந்த வெற்றிக்கு சதம் அடித்து முக்கிய பங்காற்றிய சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையும் சேர்த்து மொத்தம் 17 விருதுகளை வென்றுள்ள அவர் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சூரியகுமார் யாதவ், விராட் கோலி மற்றும் மலேசியாவின் விரன்தீப் சிங் தலா 16 ஆட்டநாயகன் விருதுகள் வென்றதே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: 58/8 டூ 189.. 27 வருட இந்தியாவை போலவே வெஸ்ட் இண்டீஸ்க்கு நேர்ந்த சோகம்.. இலங்கை அபார வெற்றி
மறுபுறம் ஜிம்பாப்வே அணியிடம் மோசமாக அடி வாங்கி தோற்ற கம்பியா அணி மோசமான உலக சாதனைகளை படைத்தது. குறிப்பாக 4 ஓவரில் 93 ரன்கள் வழங்கிய அந்த அணியின் மூஸா ஜார்பத் அதிக ரன்கள் வழங்கிய பவுலராக சாதனை படைத்தார். மேலும் சர்வதேச டி20 போட்டியில் அதிக (5) பவுலர்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய அணியாகவும் கம்பியா மோசமான சாதனை படைத்தது.



