சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசையினை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர் முடிந்த கையோடு புதிய ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஐ.சி.சி தரவரிசையில் சாதனை நிகழ்த்திய சிக்கந்தர் ராசா :
அப்படி வெளியான ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 39 வயதான ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் சிக்கந்தர் ராசா செய்த இந்த சாதனைக்காக பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த சிக்கந்தர் ராசா இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 151 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை புள்ளி பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் ஆல்ரவுண்டராக முதலிடத்தினை பிடித்து அசத்தியுள்ளார். அவருக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஒருநாள் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வேளையில் அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ள ராசா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோன்று பேட்ஸ்மேனாகவும் தரவரிசை பட்டியலில் 22-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஜிம்பாவே அணிக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சிக்கந்தர் ராசா இதுவரை அந்த அணிக்காக 153 போட்டிகளில் பங்கேற்று விளையாடி 7 சதம் மற்றும் 24 அரைசதம் என 4476 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிட்டையராகும் எண்ணம் இல்லை.. அதுவரைக்கும் தொடர்ந்து விளையாடுவேன் – புவனேஷ்வர் குமார்
ஜிம்பாப்வே அணியை பொறுத்த வரை நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவர் இன்னும் சில ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜிம்பாப்வே அணிக்கு சில ஆண்டுகள் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார்.



