இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கழுத்து வலி காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடாத அவர் ஒருநாள் தொடரிலும் இடம்பெறாமல் போனார். அதன் காரணமாக தற்போது ஜெய்ஸ்வால் அவரது இடத்தில் விளையாடி வருகிறார்.
உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சுப்மன் கில் :
இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்த கையோடு டிசம்பர் 9-ஆம் தேதி முதல் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக டி20 அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது துணை கேப்டனாக மீண்டும் சுப்மன் கில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனாலும் இந்த டி20 தொடரில் சுப்மன் கில் விளையாட அவரது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த டி20 தொடருக்கு முன்னதாக பெங்களூரு செல்லவுள்ள சுப்மன் கில் அங்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றால் அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு 2026 டி20 உலககோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அந்த தொடருக்கான முழு அணியை நிர்வாகம் தயார் செய்து வருகிறது. அந்த அணியில் சுப்மன் கில் முக்கியமான வீரர் என்பதால் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடி தன்னை நிரூபிக்க விரும்புவார் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : இப்போதைக்கு கேப்டன்சி குறித்து யோசிக்கல.. ஆனா.. ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பதவி குறித்து – ரியான் பராக் பேச்சு
ஒருவேளை சுப்மன் கில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் போனால் அவரது துவக்க வீரருக்கான இடத்தில் மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



