அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றுள்ளார். அதே வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கேப்டன் பதவி குறித்து இப்போதைக்கு யோசிக்கல : ரியான் பராக்
மேலும் எதிர்வரும் மினி ஏலத்திலும் ராஜஸ்தான் அணி சில முக்கிய வீரர்களை வாங்க இருக்கிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேறியதால் அடுத்ததாக புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு தற்போது இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் மற்றும் ரியான் பராக் ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கிறது. அதே வேளையில் சிஎஸ்கே அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு வந்த அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவும் கேப்டன்சி போட்டியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி தனக்கு வந்தால் என்ன செய்வேன்? என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர இளம் வீரரான ரியான் பராக் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் ஏற்கனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் எங்களது அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தேன். என்னுடைய கேப்டன்சி 80 முதல் 85 சதவீதம் சிறப்பாக இருப்பதாகவே உணர்கிறேன். தற்போதைக்கு நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து நிறைய யோசிக்கவில்லை.
இதையும் படிங்க : விராட் கோலி விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட ஒப்புக்கொண்டது ஏன்? – ரவிச்சந்திரன் அஷ்வின் பேட்டி
ஆனால் அணியின் நிர்வாகம் என்னை கேப்டனாக நியமிக்க விரும்பினால் நான் இரு கைகளிலும் அதனை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஒரு வீரராக நான் என்னுடைய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் வேளையில் கேப்டனாகவும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.



