- Advertisement -
ஐ.பி.எல்

வெறும் 93.48 ஸ்ட்ரைக் ரேட்டில் உருட்டியே ஆட்டநாயகனான கில்.. கோலிக்கு பின் தோனியின் அரிய சாதனை சமன்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மும்பையில் 56வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பையை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 8 வெற்றிகளைப் பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 35, சூரியகுமார் யாதவ் 53, கோர்பின் போஸ்க் 27 ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் கில் 43, பட்லர் 30, ரூதர்போர்ட் 28 ரன்கள் எடுத்தனர். அதனால் 18 ஓவரில் 132/6 ரன்கள் எடுத்த குஜராத் வெற்றியை நெருங்கிய போது மழை வந்தது.

- Advertisement -

அரிதான நாயகன்:

அதன் காரணமாக 19 ஓவராக குறைக்கப்பட்ட அப்போட்டியில் கடைசி ஓவரில் குஜராத்துக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹார் வீசிய அந்த ஓவரில் குஜராத் 15 ரன்கள் அடித்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு லோயர் ஆர்டரில் திவாட்டியா 11*, ஜெரால்டு கோட்சி 12 (அவுட்), அர்சத் கான் 1* ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டது சில ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்திருக்கலாம். ஏனெனில் 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 43 ரன்களை 93.48 என்ற மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். மறுபுறம் பட்லர் 111.11, ரூதர்போர்ட் 186.68 ஸ்ட்ரைக் ரேட்டில் முறையே 30, 28 ரன்களை அவரை விட வேகமாக அடித்தனர்.

- Advertisement -

தோனி, விஹாரிக்கு பின்:

எனவே அவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை கொடுத்திருக்கலாம். அல்லது கடைசி நேரத்தில் அசத்திய திவாட்டியா, ஜெரால்டு கோட்சி, அர்சத் கானுக்கு வழங்கியிருக்கலாம். இருப்பினும் கடினமான சூழ்நிலைகளில் நங்கூரமாக விளையாடியதன் காரணமாக அவ்விருதை வென்ற “சுப்மன் கில் ஐபிஎல் வரலாற்றில் 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்ற 3வது வீரர்” என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: பயிற்சி எடுக்காத தோனி காயமா? கொல்கத்தா போட்டியில் விளையாடுவாரா? கோச் சிம்மன்ஸ் பேட்டி

இதற்கு முன் 2008இல் டெல்லிக்கு எதிராக சென்னையின் தோனி 33 (33) ரன்களை 100.00, 2013இல் பெங்களூருவுக்கு எதிராக ஹைதெராபாத்தின் ஹனுமா விஹாரி 44* (46) ரன்களை 95.65 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர். தற்போது கில் அவர்களை விட குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அரிதாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார். இது போக விராட் கோலி (2013இல் 634), ஸ்ரேயாஸ் ஐயருக்குப் (2020இல் 519) பின் ஒரு ஐபிஎல் தொடரில் 26 வயதுக்குள் 500+ ரன்களை அடித்த 3வது இந்திய கேப்டன் என்ற சாதனையும் கில் சமன் செய்துள்ளார்.

- Advertisement -