
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த டெஸ்ட் கேப்டன் பதவிக்கான போட்டியில் பல்வேறு வீரர்கள் இருந்தாலும் இளம் வீரரான சுப்மன் கில்லே முதல் தேர்வாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் பதவியை வகித்து வருவதால் இந்திய அணியின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு அவரை டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் மாற்ற இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ விரும்புகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது புதிய கேப்டனாக சுப்மன் கில்லின் பெயர்தான் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இப்படி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை பெறப்போகும் சுப்மன் கில் மேலும் ஒரு விடயமாக விராட் கோலியின் நான்காவது இடத்தில் தான் பேட்டிங் செய்ய போகிறார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான்காவது வீரராக களம் இறங்கி கடந்த பல ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விராத் கோலியும் இம்மாத துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் அவருக்கு பதில் நான்காவது இடத்தில் எந்த வீரர் விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் விராட் கோலியின் நான்காவது இடத்தில் சுப்மன் கில் விளையாடப்போகிறார் என்றும் ஏற்கனவே அவர் விளையாடி வந்த 3 ஆவது இடத்தில் வேறு வீரருக்கு வாய்ப்பளிக்கப்டும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் 3 ஆம் வரிசையில் இதுவரை பெரிய ரன் குவிக்காத கில்லுக்கு ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : டி20 நாயகனை டெஸ்ட் தொடருக்கு தேர்வுசெய்ய ஆர்வம் காட்டும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
இந்திய அணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் இதுவரை 32 போட்டிகளில் விளையாடி 5 சதம் மற்றும் 7 அரைசதம் என 35 ரன்கள் சராசரியுடன் 1893 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.