IPL 2023 : உலக கிரிக்கெட்டின் அடுத்த தசாப்தத்தில் அவர் டாமினேட் பண்ண போறாரு – இளம் இந்திய வீரரை பாராட்டிய ஹெய்டன்

Matthew Hayden
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது அணிக்காக மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் முனைப்புடன் விளையாடி வரும் பல இளம் வீரர்களுக்கு மத்தியில் சுப்மன் கில் மீண்டும் தொடர்ச்சியான நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து மறக்க முடியாத வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

அதே போல ஐபிஎல் தொடரிலும் 2019 சீசனில் கொல்கத்தா அணியில் சிறப்பாக செயல்பட்டு வளர்ந்து வரும் வீரர் விருதை வென்ற அவர் கடந்த வருடம் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல உதவினார். அதன் காரணமாக இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்தார்.

டாமினேட் பண்ணுவாரு:
அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்த அவர் டி20 தொடரிலும் அதிரடியாக சதமடித்து தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதன் பின் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் சதமடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக சாதனை படைத்தார்.

Gill

இந்த ஐபிஎல் தொடரிலும் 63 (36), 14 (13), 39 (32), 67 (49) என நல்ல ரன்களை எடுத்து குஜராத்தின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வரும் அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தப்போகும் இந்திய பேட்டிங் துறையின் வருங்கால சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில் தேவையான நேரத்தில் அதிரடியாக விளையாடும் திறமை கொண்ட சுப்மன் கில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தரமான பந்து வீச்சுக்கு எதிராக நிதானத்தை வெளிப்படுத்த சூழ்நிலையில் நங்கூரமாக செயல்பட்டு 67 (49) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் சிறப்பான ஷாட்களை அடிக்கும் திறமையுடன் தொடர்ந்து பெரிய ரன்களை குவித்து வரும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தசாப்தத்தில் ராஜாங்கம் நடத்துவார் என்று தெரிவிக்கும் ஹெய்டன் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சேசிங்கில் வெற்றி பெறுவதற்கு யாராவது ஒருவர் பொறுப்புடன் கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் அந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு அட்டாக் மிகவும் தரமாக இருந்தது”

Hayden

“அப்படிப்பட்ட நிலையில் அந்த வேலையை சுப்மன் கில் கச்சிதமாக செய்தார். அவர் விளையாடிய சில ஷாட்டுகள் கண்களுக்கு மிகவும் விருந்தாக அமைந்தன. மிகவும் கிளாஸ் நிறைந்த வீரராக செயல்பட்டு வரும் அவர் நிச்சயமாக உலக கிரிக்கெட்டில் அடுத்த தசாப்தம் அல்லது அதையும் தாண்டி டாமினேட் செய்யக்கூடியவராக திகழ்கிறார்” என்று கூறினார். முன்னதாக அந்த போட்டியில் அரை சதமடித்த பின்பு தான் சுப்மன் கில் அதிரடியாக விளையாடத் துவங்கியதாக முன்னாள் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க:KKR vs SRH : மீண்டும் அதிரடியாக போராடிய ரிங்கு சிங், ஆனாலும் முக்கிய தவறை செய்த கொல்கத்தா – ஹைதராபாத் வென்றது எப்படி

இருப்பினும் 154 ரன்களை துரத்தும் போது பந்து வீச்சில் போராடிய பஞ்சாப்புக்கு எதிராக அனைவருமே அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தால் வெற்றி பறிபோக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். சொல்லப்போனால் அதிரடி காட்டக்கூடிய பாண்டியா, மில்லர் ஆகியோர் கூட பஞ்சாப்பின் தரமான பந்து வீச்சில் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினர். அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய காரணத்தினாலேயே அவரை ஹைய்டன் இந்தளவுக்கு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement