இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது கடந்த ஜூன் 6-ம் தேதி துவங்கி இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்றி அசத்தியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வெற்றி குறித்து : சுப்மன் கில் பேச்சு
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது தங்களது முதலில் 152 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களிலும் சுருண்டது.
அதன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த வெற்றியை ஒரு முழுமையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஏனெனில் எங்களது அணி பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
இந்த போட்டியில் நாங்கள் பாலோ ஆன் கொடுத்ததற்கு முக்கிய காரணம் யாதெனில் : மைதானத்தில் அதிகப்படியான வெயில் இருந்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியை தொடர்ச்சியாக விளையாட வைத்து உணவு இடைவேளை அல்லது தேநீர் இடைவேளைக்குள் வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தை வைத்திருந்தோம். அந்த வகையிலேயே எங்களது பந்துச்சாளர்களும் புத்துணர்ச்சியோடு இருந்ததால் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை வீழ்த்த முடிந்தது.
இதையும் படிங்க : மாபெரும் சாதனையுடன் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்திய இந்திய அணி – விவரம் இதோ
இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். அதேபோன்று மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



