
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களையும், ஜாஸ் பட்லர் 50 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக மஹேஷ் தீக்ஷனா 2 விக்கெட்டையும், ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 15.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 101 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும் குவித்து அசத்தினர்.
200-க்கும் மேற்பட்ட இலக்கினை ராஜஸ்தான் ராயல் அணியானது அந்த அணியின் துவக்க வீரர்களின் அதிரடி காரணமாக நான்கு ஓவர்களுக்கு முன்னதாகவே எட்டியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் எங்களிடம் இருந்து ஆட்டத்தை கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்ததற்கு அந்த அணியின் துவக்க வீரர்களின் சிறப்பான ஆட்டமே முழுக்க முழுக்க காரணம். இந்த போட்டியில் நாங்கள் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டோம். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தால் போட்டியில் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். இது குறித்து நாங்கள் அனைவரும் அமர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஏகப்பட்ட பாடங்களை கற்றுள்ளோம்.
இதையும் படிங்க : இந்த 5 திறமை இருப்பதாலயே.. 14 வயதில் சூர்யவன்சி சதம் அடிச்சுருக்காரு.. ஜாம்பவான் சச்சின் ஸ்பெஷல் பாராட்டு
அடுத்த போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ள வேளையில் அங்கு மீண்டும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஏற்கனவே எங்களது ஹோம் கிரவுண்டில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அந்த வெற்றி தொடரும் என்று நினைப்பதாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.