என் தந்தை செய்த இந்த விடயத்தை மறக்கவே மாட்டேன்.. அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சுப்மன் கில் நெகிழ்ச்சி

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை அண்மையில் பெற்றார். அதுமட்டுமின்றி நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் பதவியேற்று இருக்கிறார். அதோடு இனிவரும் தொடர்களில் ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மாவிற்கு பதிலாக புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இப்படி மூன்று வகையான இந்திய அணிக்கும் வருங்கால கேப்டனாக மாறப்போகும் சுப்மன் கில் தற்போது நட்சத்திர வீரராக இந்திய அணியில் திகழ்ந்து வருகிறார்.

எனது தந்தைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்க கடமை பட்டுள்ளேன் : சுப்மன் கில்

கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்த சுப்மன் கில் அதன்பின்னர் கொல்கத்தா அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமாகி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் வெகு விரைவிலேயே சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

- Advertisement -

அதன்பின்னர் இப்போது மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வரும் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் தனது தந்தை எவ்வாறு தனக்கு உதவினார்? என்பது குறித்து உணர்வு பூர்வமாக சில நெகிழ்ச்சியான கருத்துக்களை சுப்மன் கில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

எனது கிரிக்கெட் கரியரின் ஆரம்ப கட்டத்தில் நான் அகாடமிக்கு சென்று பயிற்சி செய்ய என் தந்தை மிகப்பெரிய உதவிகளை எனக்கு செய்தார். குறிப்பாக ஒரு அகாடமி பயிற்சியாளருடன் ஒரு காலகட்டத்தில் எனது அப்பாவிற்கு சிறு மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த அகாடமியில் இருந்து அந்த பயிற்சியாளர் எங்களை வெளியேற்றினார். அது ஒரு பொதுவான அகாடமி என்பதனால் அவர் இல்லாத போது நாங்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டோம்.

- Advertisement -

குறிப்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையிலும் அந்த பயிற்சியாளர் தனது பயிற்சி அமர்வுகளை அங்கு நடத்துவார். எனவே அவருக்கு முன்னதாக நான் எனது அப்பாவுடன் 3 மணிக்கு அகாடமிக்கு வந்து விடியற்காலை 6:00 மணி வரை பயிற்சி செய்வேன். அதேபோன்று மாலை வேளைகளிலும் அவர் இல்லாத போது பயிற்சிகளை செய்வேன். இதற்கிடையே பள்ளிக்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதையும் படிங்க : ஷாகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்து வரலாறு படைக்க காத்திருக்கும் லிட்டன் தாஸ் – விவரம் இதோ

காலையில் 3 மணிக்கு எழுந்திருப்பதெல்லாம் பெரிய சவாலாக இருக்கும். ஒரு குழந்தையாக நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள். ஆனாலும் எனது தந்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் என்னை தொடர்ச்சியாக மூன்று மணிக்கு எழுப்பி பயிற்சி பெற வைத்தார். எனது கரியரின் ஆரம்பகட்ட பயிற்சிகளை நான் அவ்வாறு கடினமாக மேற்கொண்டதால் தான் இன்று இந்திய அணியில் நல்ல நிலையில் இருக்கிறேன். எனக்காக அவர் செய்த தியாகங்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளானாக இருக்க வேண்டும் என்றும் சுப்மன் கில் தனது தந்தை குறித்து நெகிழ்ச்சியாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement