இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வான மகிழ்ச்சியில் அடுத்த நாளே சதமடித்த இளம் வீரர் – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றியும் 1 தோல்வியும் பதிவு செய்து நாக் அவுட் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் அதன்பின் வங்கதேசத்தில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த 4 தொடரில் பங்கேற்கும் 4 வகையான அணிகளும் மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக நியூசிலாந்து மண்ணில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுப்பதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார். அவரது தலைமையில் உம்ரான் மாலிக், குல்தீப் சென் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல் அந்த அணியில் முதல் முறையாக மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் தேர்வாகி அசத்தியுள்ளார்.

- Advertisement -

மகிழ்ச்சியில் சதம்:
கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று 2019 ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் இளம் வீரர் விருதையும் வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் யாராலும் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதன்பின் காயத்தால் வெளியேறிய இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஃபைனல் உட்பட 483 ரன்களை குவித்து முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்ய முக்கிய பங்காற்றி அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். அப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென்று முத்திரை பதித்தூள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாட தடுமாறியதால் இதுநாள் வரை வாய்ப்பு பெறாமலேயே இருந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது ஐபிஎல் உட்பட சமீபத்திய போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ஃபார்மில் இருப்பதால் முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாட நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெற்ற கர்நாடகாவுக்கு எதிரான முக்கியமான காலிறுதி போட்டியில் சதமடித்து தனது அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு 11 பவுண்டரி 9 சிக்ஸ்ருடன் சதமடித்த சுப்மன் கில் 126 (55) ரன்கள் குவித்து பஞ்சாப் 20 ஓவர்களில் 225/4 ரன்கள் எடுக்க உதவினார். அதை துரத்திய கர்நாடகம் கேப்டன் மயங் அகர்வால் போன்ற முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் கடைசியில் அபிநவ் மனோகர் 62* (29), மணிஷ் பாண்டே 45 (29) ரன்கள் குவித்து போராடிய போதிலும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை விட முதல் நாளன்று முதல் முறையாக இந்திய டி20 அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் அடுத்த நாள் சதமடித்த சுப்மன் கில் தனது அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement