2023 உ.கோ’க்கு சரியான ஓப்பனிங் ஜோடியா? கங்குலி – சேவாக் சாதனையை தகர்த்த ரோஹித் – கில் ஜோடி புதிய சாதனை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசிப் போட்டியிலும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக 385/9 ரன்கள் விளாசி மிரட்டியது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 101 (85) ரன்களும் சுப்மன் கில் 112 (78) ரன்களும் விளாசிய நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 54 (38) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதை தொடர்ந்து 386 ரன்கள் துரத்திய நியூசிலாந்துக்கு தொடக்க வீரர் டேவோன் கான்வே சதமடித்து 12 பவுண்டரி 8 சிக்ஸருடன் 138 (100) ரன்கள் குவித்தார். ஆனால் அவரை தவிர்த்து டாம் லாதம் 0, கிளன் பிலிப்ஸ் 5 என இதர முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 295 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து பரிதாபமாக தோற்றது.

அசத்தும் ஓப்பனிங் ஜோடி:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். முன்னதாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா இத்தொடரையும் வென்று தொடர் வெற்றிகளை பதிவு செய்ததால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா மணிமகுடம் சூடியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

IND-vs-NZ

முன்னதாக உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், கேஎல் ராகுல் ஆகியோர் தடவலாக செயல்பட்டு தங்களது இடத்தை தக்க வைக்காமல் கோட்டை விட்டுள்ளனர். அந்த வாய்ப்பில் இலங்கைக்கு எதிரான தொடரில் சதமடித்து இத்தொடரிலும் 208, 40*, 112 என மொத்தமாக 360 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றுள்ள சுப்மன் கில் அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி ரோகித் சர்மாவுடன் உலகக்கோப்பையில் களமிறங்கும் ஓப்பனிங் வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய ரோகித் சர்மா சமீபத்திய தொடர்களில் நல்ல தொடக்கத்தை பெற்று அவுட்டாகி வந்தார். அந்த கதைக்கு இப்போட்டியில் முற்றுப்புள்ளி வைத்த அவர் 507 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.

Shubman gill

முன்னதாக இப்போட்டியில் 26.1 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கி 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அந்த 212 ரன்களை 8.10 என்ற அதிரடியான ரன் ரேட்டில் குவித்த அந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் (குறைந்தபட்சம் 25 ஓவர்கள்) அதிக ரன் ரேட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற கங்குலி – சேவாக் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் – ரோஹித் சர்மா : 8.10, நியூசிலாந்துக்கு எதிராக, 2023*
2. சவுரவ் கங்குலி – வீரேந்திர சேவாக் : 7.35, வெஸ்ட் இண்டீஸ் எதிராக, 2002
3. ரோகித் சர்மா – ஷிகர் தவான் : 6.72, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013

இதையும் படிங்க: போய் வாயை கழுவுங்க, இந்தியா மீது இப்போதே கண் வைத்த மைக்கேல் வாகன் – ரசிகர்கள் விளாசும் அளவுக்கு என்ன சொன்னாரு பாருங்க

மேலும் 143, 33, 95, 60, 72, 212 என இதுவரை ஜோடியாக விளையாடிய 6 போட்டிகளில் 3 அரை சதம் பார்ட்னர்ஷிப், 1 சதம் பார்ட்னர்ஷிப், 1 இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அடித்துள்ள இந்த ஜோடி தான் 2023 உலக கோப்பையில் இந்திய அணிக்கு களமிறங்க தகுதியான ஓப்பனிங் ஜோடி என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement