
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குயின்ஸ் பார்க் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் சாமர்த்தியத்தால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 2-வது போட்டியில் அக்சர் படேல் அதிரடியால் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் திரில் வெற்றி பெற்றது. அதனால் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் சாதித்துக் காட்டியுள்ள இந்தியா வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் சாய்த்து அசத்தியுள்ளது.
இந்த தொடரில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானுடன் இஷான் கிசான் அல்லது ருதுராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் காயத்தால் விலகி மீண்டும் அணியில் இணைந்துள்ள இளம் வீரர் சுப்பன் கில் ஆச்சர்யப்படும் வகையில் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் கச்சிதமாக பயன்படுத்திய அவர் முதல் போட்டியில் 64 (53) ரன்களும் 2-வது போட்டியில் 43 (49) ரன்களும் குவித்து பொன்னாக மாற்றி வருகிறார்.
அஜாக்கரதையான கில்:
குறிப்பாக அனுபவமான ஷிகர் தவான் பொறுமையாக ரன்கள் குவிக்க மறுபுறம் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு ரன்கள் சேர்த்த இவர் 2 போட்டிகளிலுமே 119, 48 என சிறப்பான ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிகளுக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். தவானுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்து நல்ல தொடக்கத்தை பெறும் அவர் அதை தனது அஜாக்கிரதையால் பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் அவுட்டாகி விடுகிறார்.
ஏனெனில் முதல் போட்டியில் 100+ ஸ்டிரைக் ரேட்டில் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் அஜாக்கிரதையாக ரன் எடுக்க ஓடி ரன் அவுட்டானார். அதைவிட 2-வது போட்டியிலும் நன்கு செட்டிலான பின் வித்தியாசமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் ஸ்கூப் ஷாட்டை அடிக்க தெரியாமல் அடித்து பந்தை வீசிய பவுலரிடமே அழகான கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றார். இருப்பினும் அவரிடம் இருக்கும் திறமைக்கு சற்று கவனத்துடன் விளையாடினால் இந்நேரம் சதமடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கே தோன்றுகிறது.
விக்கெட்டை வீணாடக்காதீங்க:
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிகச்சிறப்பாக தொடங்கும் சுப்மன் கில் அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்டை எதிரணிக்கு பரிசுளிக்கும் வகையில் அவுட்டானதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். அதனால் வரும் போட்டிகளில் முக்கிய தருணங்களில் கவனத்துடன் விளையாடினால் அவரிடம் இருக்கும் திறமைக்கு பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால் நன்கு செட்டிலான பின் மீண்டும் ஒருமுறை தனது விக்கெட்டை பரிசளித்து விட்டார். இதை தற்போது அவர் தொடர்ச்சியாக செய்யத் தொடங்கியுள்ளார். மிகச்சிறப்பாக தொடங்கும் அவர் அந்த இன்னிங்சை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரிடம் ஏராளமான திறமைகள் உள்ளது” என்று கூறினார்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இந்தத் தொடரை வென்றதற்கு இந்திய அணியின் பெஞ்சில் இருக்கும் வீரர்களும் தரமானவர்களாக இருப்பதே காரணம் என்று தெரிவிக்கும் சல்மான் பட் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் பெஞ்சில் உள்ள வீரர்களும் பலமானவர்களாக உள்ளனர். அவர்கள் முன்னேற்றமடையும் நேரத்தில் இருக்கும் போது தொடர்ச்சியாக தரமான வீரர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக முக்கிய வீரர்கள் இல்லாத போது இது போன்ற தரமான வீரர்கள் கிடைப்பது இதர அணிகளில் இதர அணிகளில் நாம் பார்க்க முடிவதில்லை”
“இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்கும் போது அந்த வாய்ப்பில் நம்பிக்கைக்கு பாத்திரமாக இளம் வீரர்கள் செயல்படுவதே இதற்குக் காரணமாகும். இந்திய அணியில் வீரர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நல்ல தொடர்பு இருப்பதே அவர்களின் வெற்றியின் ரகசியமாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க : IND vs WI : நான் மட்டும் அல்ல எல்லோருமே அவர்மேல நம்பிக்கையா இருந்தோம் – த்ரில் வெற்றி குறித்து பேசிய சிராஜ்
ஜூலை 27-ஆம் தேதியன்று நடைபெறும் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் ஒயிட்வாஷ் வெற்றி பெறுவதற்கு இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.