IND vs ZIM : மார்க் வாக் மாதிரி அட்டகாசமா ஆடுறாரு – இளம் இந்திய வீரரை மனதார பாராட்டும் முன்னாள் பாக் வீரர்

Shikhar-Dhawan
Advertisement

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக தீபக் சஹர், அக்சர் பட்டேல் மற்றும் பிரசிட் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Shubman Gill

அதை தொடர்ந்து 190 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி சுமாராக பந்துவீசிய ஜிம்பாப்வே பவுலர்களை நங்கூரமாக நின்று அடித்து நொறுக்கிய ஷிகர் தவான் 9 பவுண்டரியுடன் 81* (113) ரன்களும் சுப்மன் கில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82* (72) ரன்களும் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் 192/0 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு காயத்திலிருந்து குணமடைந்தது அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்த தீபக் சஹர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆகஸ்ட் 20இல் நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்ற தயாராகியுள்ளது.

- Advertisement -

கலக்கிய கில்:
இந்த தொடரின் முதல் போட்டியில் 190 ரன்களை துரத்துகையில் அபாரமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு பாடம் எடுக்கும் வகையில் அவரை விட அதிரடியாக ரன்களைச் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். கடந்த 2019இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முதல் 3 போட்டிகளில் சுமாராக செயல்பட்ட நிலையில் இடையில் காயத்தால் ஒன்றரை வருடங்கள் அணியிலிருந்து விலகியிருந்தார்.

Shubman Gill 98

அந்த நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் வென்ற குஜராத் அணியின் பேட்டிங் துறையில் முக்கிய வீரராக செயல்பட்ட இவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முழுமையாக வாய்ப்பு பெற்று 64, 43, 98* என நல்ல ரன்களைக் குவித்து வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். தற்போது இந்த ஜிம்பாப்வே தொடரிலும் அசத்தும் அவர் கடைசி 4 இன்னிங்சில் முறையே 64, 43, 98*, 82* என 287 ரன்களை 143.5 என்ற அபாரமான சராசரியில் 105.51 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சூப்பரான பார்மில் உள்ளார்.

- Advertisement -

மார்க் வாக் மாதிரி:
அதைவிட அதிரடி சரவெடியாகவும் இல்லாமல் புஜாராவை போல் அதீத பொறுமையாகவும் அல்லாமல் அதே சமயம் அதிக பந்துகளையும் வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்கள் குவிப்பது இவரது பேட்டிங் ஸ்டைலாக உள்ளது வரும் காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் வருவார் என்பதை இப்போதே காட்டுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் மார்க் வாக், டேமியன் மார்ட்டின் போன்ற சீரான வேகத்தில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களின் சாயலில் சுப்மன் கில் செயல்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் மனதார பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Butt

“இப்போதெல்லாம் அனைவரும் அதிரடியாக விளையாடுவதை மட்டுமே பேசுகிறார்கள். மேலும் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை மட்டுமே நிறைய பேர் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் சுப்மன் கில் போன்ற ஒருவர் சரியான டைமிங்கில் பந்தை அழகாக அடிக்கிறார். மேலும் வழக்கத்தில் உள்ள அத்தனை ஷாட்களையும் அடிப்பவராக உள்ளார். பாபர் அசாமும் அவரை போன்றவர் தான். உலகிலேயே தற்போதைய நிலைமையில் 4 – 5 வீரர்கள் மட்டுமே இந்த வகையில் செயல்படுபவர்களாக உள்ளனர். எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியான பேட்டிங்கை நோக்கி மாறத் துவங்கியுள்ளனர்”

“அத்துடன் சுப்மன் கில்லை பார்க்கும்போது எனக்கு மார்க் வாக் மற்றும் டேமியன் மார்ட்டின் ஆகியோரின் நினைவு தான் வருகிறது. அவர்கள் பந்தை வெறும் தொட மட்டும் தான் செய்வார்கள். அவர்களின் பேட்டிங்கை பார்க்கும் போது பந்தை கடினமாக அடிப்பதாக உங்களுக்கு தோன்றாது. அவர்களைப் போலவே கில்லும் அழகான கிரிக்கெட்டை விளையாடுகிறார். அவர் பேட்டிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். முதல் முறையாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோதே இவர் பெரிய அளவில் வருவார் என்று அப்போதே நான் கூறியிருந்தேன்” என்று கூறினார்.

Advertisement