
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அந்த வகையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இன்றைய இரண்டாம் நாள் உணவு இடைவெளி வரை இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழந்து 109 ரன்கள் குவித்துள்ளது.
அதன்காரணமாக இன்னும் 115 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக நான்காவது வீரராக பேட்டிங் செய்திருந்த சுப்மன் கில் 35 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரியுடன் 21 ரன்கள் குவித்து சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனாலும் அவர் அடித்த இந்த 21 ரன்கள் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் சாதனை ஒன்றினை அவர் முறியடித்துள்ளார். அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரராக 2617 ரன்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : இந்தியா 224க்கு அவுட்.. இங்கிலாந்து தலையில் பேண்ட் அணிந்து விளையாடக் காரணம் என்ன? விவரம் இதோ
இந்நிலையில் அவரை கடந்த சுப்மன் கில் தற்போது 2636 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் 2731 ரன்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 2716 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.