இங்கிலாந்து எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையிலான இந்தியா வென்றது. அடுத்ததாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி ஆறாம் தேதி நாக்பூரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 49.4 ஓவரில் 248 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
துணை கேப்டன் கில்:
அடுத்ததாக 249 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2, அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 59, சுப்மன் கில் 87, அக்சர் பட்டேல் 52 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 38.4 ஓவரிலேயே ரன்கள் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் இந்தத் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக அடில் ரசித், சாகிப் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 87 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “19/2 என தடுமாறிய போது நேர்மறையுடன் விளையாட முயற்சித்தேன். பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருந்தது”
பேட்டிங் மாறல:
“அது போன்ற சூழ்நிலையில் பின்னங்காலில் அதிகமாக செல்லாமல் நல்ல ஷாட்டுகளை அடிப்பதே ஐடியாவாக இருந்தது. ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடியது எதிரணியை பின்னங்கால் வைக்க வைத்தது. அவர் அதிரடியாக விளையாடியதும் எனக்கு உதவியது. 70 ரன்களில் இருந்த போது நான் அடித்த ஃபுல் ஷாட் மிகவும் பிடித்தது”
இதையும் படிங்க: ரொம்ப நாள் ஆச்சு.. இது ரொம்ப முக்கியம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின்னர் – ரோஹித் சர்மா பேச்சு
“பிட்ச் கொஞ்சம் இருதலைபட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். ஸ்பின்னர்கள் வேகத்தை நன்றாக மாற்றி வீசினார்கள். மெதுவாக வீசும் போது அது திரும்பியது. துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் எனது பேட்டிங் பெரிதாக மாறவில்லை. ஆனால் களத்தில்போட்டியைப் பற்றிய சிந்தனைகளை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போல ரோகித் பாய் என்ன நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு எனது உள்ளீடுகளையும் கொடுக்க முயற்சிக்கிறேன். போட்டியை பற்றி ஏதேனும் சொல்ல விரும்பினால் கொஞ்சமும் தயங்காமல் சொல்லுங்கள் என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.



