அந்த 2 மேட்ச்ல ஜெய்ச்ச குஜராத் கண்டிப்பா பிளே ஆஃப் போய்டும்.. கொல்கத்தாவை வீழ்த்திய ஆட்டநாயகன் கில் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 39வது போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 199 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 90 ரன்கள் அடித்தார்.

அவருடன் சேர்ந்து 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 52 ரன்கள் குவித்தார். மிடில் ஆடரில் ஜோஸ் பட்லர் 41* ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய கொல்கத்தாவுக்கு குர்பாஸ் 1, சுனில் நரைன் 17,வெங்கடேஷ் ஐயர் 14 ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

அதே போல மறுபுறம் அரை சதத்தை அடித்து போராடிய கேப்டன் ரஹானே 50 ரன்கள் எடுத்த போது ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். அப்போது ஃபினிஷிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 17, ரசல் 21 ரன்னில் அவுட்டாகி கை கொடுக்கவில்லை. அதனால் 20 ஓவரில் கொல்கத்தாவை 159/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய குஜராத் தங்களுடைய 6வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2, ரசித் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் டெல்லி, கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த 2 போட்டிகளில் வென்றதால் குஜராத்தின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பிளே ஆஃப் வாய்ப்பு:

“இந்த 2 போட்டிகளைப் பற்றி நாங்கள் பேசினோம். அதுவே நாங்கள் புள்ளிப்பட்டியலில் எங்கே நிற்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கக்கூடிய போட்டிகளாகும். அப்படிப்பட்ட போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது மகிழ்ச்சி. நாங்கள் எங்கே சென்றாலும் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நான், சாய் சுதர்சன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் பேட்டிங்கில் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை”

இதையும் படிங்க: சுப்மன் கில்லுடன் சாதனை பார்ட்னர்ஷிப் அமைக்க இதான் காரணம்.. ஆரஞ்சு தொப்பி நாயகன் சுதர்சன் பேட்டி

“எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடி முடிந்தளவு நிறைய ரன்கள் குவிக்க விரும்புகிறோம். நாங்கள் முன்னிலையில் இருந்தாலும் போட்டியை முடிப்பது முக்கியம். நல்ல அணிகள் போட்டியை நன்றாக முடிக்கும். டி20 கிரிக்கெட்டில் எப்போதும் நீங்கள் கச்சிதமான ஆட்டத்தை விளையாட முடியாது. இன்று கூட நான் கடைசி வரை நின்று இருந்தால் எக்ஸ்ட்ரா 10 ரன்கள் அடித்திருக்க முடியும். அந்த சிறிய குறைகளையும் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் வழியைக் கண்டறிய வேண்டும். அதில் நாங்கள் சிறந்தவர்கள்” என்று கூறினார்.

Advertisement