ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 60வது போட்டியில் டெல்லியை 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேஎல் ராகுல் 112* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய குஜராத் 19 ஓவரில் 205/0 ரன்களை அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை அடித்து 108*, கேப்டன் சுப்மன் கில் 93* ரன்கள் விளாசி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இதையும் சேர்த்து 9 வெற்றிகளைப் பெற்ற குஜராத் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பஞ்சாப், பெங்களூரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் எஞ்சிய ஒரு இடத்திற்கு டெல்லி, மும்பை அணிகளிடம் போட்டி நிலவுகிறது.
குஜராத் வெற்றி:
இந்நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றதில் மகிழ்ச்சி என்று குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். மேலும் தம்மை கேப்டன் என்று நினைக்காமல் பேட்ஸ்மேன் என்று நினைத்துக்கொண்டு விளையாடுவதாக கூறும் அவர் டெல்லியை வீழ்த்தியது பற்றி பேசியது பின்வருமாறு. “பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதால் சிறப்பாக உணர்கிறேன். இன்னும் 2 முக்கியமான போட்டிகள் இருக்கின்றன. அந்தப் போட்டியிலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு வேகத்தை எடுத்துச் செல்வது முக்கியம்”
“பேட்டிங் செய்கையில் நான் கேப்டனாக அல்லாமல் பேட்ஸ்மேனாக நினைத்துக் கொண்டு விளையாட விரும்புகிறேன். கடந்த வருடம் முதல் முறையாக கேப்டனாக இருந்ததால் அது எனக்கு தெரியவில்லை. கடந்த வருடத்தின் இறுதியில் இந்தப் பாடத்தை நான் கற்றுக் கொண்டேன். எங்களுடைய ஃபீல்டிங் சராசரிக்கும் குறைவாக இருக்கிறது”
முதலில் பேட்ஸ்மேன்:
“நாங்கள் நிறைய கேட்ச்சுகளை தவற விட்டோம். எனவே இடைவெளி கிடைத்த போது அந்த துறையில் நாங்கள் வேலை செய்தோம். நீங்கள் ஃபார்மில் இருக்கும் போது சாய் சுதர்சன் போன்றவர் தமக்குக் கிடைக்கும் நல்ல துவக்கத்தைப் பெரிய ரன்களாக மாற்றுவது பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டும்”
இதையும் படிங்க: லீவ்ல நினைச்சதை சாதிச்சுட்டேன்.. சதமடிச்சு டெல்லியை வீழ்த்த இதான் காரணம்.. ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி
“நீங்கள் நல்ல போக்கில் செல்லும் போது வெளியே செல்ல விரும்ப மாட்டீர்கள். போட்டியை நீங்களே முடிக்க விரும்புவீர்கள். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் நாங்கள் 10 – 15 ரன்கள் எக்ஸ்ட்ரா கொடுத்ததாக நினைத்தோம். ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவி இருந்தது. டெல்லி நன்றாக பேட்டிங் செய்தனர். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்ற போது நல்ல ஷாட்டுகளை பயன்படுத்தி வெற்றி பெற முயற்சித்தோம். கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதிலிருந்து வர இடைவெளி உதவியது” என்று கூறினார்.



