
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.
அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்த 3இல் குறைந்தது 2 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. கடைசியாக அங்கே விளையாடிய போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணியை இந்தியா தோற்கடித்தது.
அந்த தன்னம்பிக்கையுடன் இம்முறையும் இந்தியா வெற்றி பெற முயற்சிக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிருந்து இது 5 போட்டிகளைக் கொண்ட தொடர் என்பதை மறந்து 3 போட்டிகள் கொண்ட தொடர் என்று நேர்முறையாக நினைத்துக் கொண்டு இந்தியா விளையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கில் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணியில் நிலைமை நன்றாக இருக்கிறது”
“நாங்கள் நேற்று இரவு மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினோம். ஆம் 2வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. ஆனால் இங்கிருந்து நாங்கள் இந்தத் தொடரை 3 போட்டிகள் கொண்ட தொடராக கருதுகிறோம். எனவே 3வது போட்டியில் நாங்கள் வென்றால் பின்னர் மெல்போர்ன், சிட்னியில் எங்களுடைய கை ஓங்கியிருக்கும்”
“இந்த விவாதத்தை தான் நாங்கள் அணி மீட்டிங்கில் பேசினோம். நாங்கள் இதை 3 போட்டிகள் கொண்ட தொடராக பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தும். கடந்த போட்டியை மறந்து விட்டு 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை வெல்வோம் என்று முடிவெடுத்துள்ளோம். அப்படி பார்த்தால் 2 – 0 என்ற கணக்கில் நாங்கள் வெல்வோம்”
இதையும் படிங்க: இந்தியா – ஆஸி 3வது டெஸ்ட்.. காபா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள் பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“இந்த நேர்மறையான சிந்தனையை தான் நாங்கள் இந்திய அணியில் கொண்டுள்ளோம். காபாவில் மீண்டும் விளையாடுவது 2021இல் விளையாடிய பழைய நினைவுகளை எனக்கு கொடுக்கிறது. எங்கள் மொத்த அணியும் இங்கே வந்து மைதானத்தில் முதலில் நடந்து பழைய நினைவுகளை திரும்பிப் பார்த்தோம். இம்முறையும் இங்கே பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.