இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஏற்கனவே நியூசிலாந்து முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் 1 முதல் மும்பையில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரன்கள் வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி போராடி 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 171-9 ரன்கள் எடுத்து 142 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது.
அசத்திய சுப்மன்:
அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக இதுவரை அஸ்வின் 3*, ஜடேஜா 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். முன்னதாக இளம் வீரர் சுப்மன் கில் சமீபத்திய போட்டிகளில் சுமாராக விளையாடியதால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் 86-4 என இந்தியா தடுமாறிய போது சிறப்பாக விளையாடிய அவர் 90 ரன்கள் குவித்து கை கொடுத்தார்.
இருப்பினும் சதத்தை தவற விட்டதால் அவர் ஏமாற்றத்துடன் சென்றது ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. இந்நிலையில் இப்போட்டியில் சதத்தை அடிக்காவிட்டாலும் இந்த 90 ரன்கள் தம்முடைய கேரியரின் ஒரு சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று சுப்மன் கில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
சிறந்த இன்னிங்ஸ்:
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இது என்னுடைய ஒரு சிறந்த இன்னிங்ஸ். ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அசத்த வேண்டும் என்ற மனநிலையை கொண்டு அவர்களை நாங்கள் அழுத்தத்திற்குள் போட முயற்சித்தோம். நாங்கள் தொடர்ச்சியாக அவர்களை அடித்தால் அவர்களால் சிறப்பாக பந்து வீசுவது கடினமாகும். கடந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே என்னுடைய ஆட்டத்தில் நான் வேலை செய்தேன்”
இதையும் படிங்க: அது நாங்க நினச்ச மாதிரி இல்ல.. டார்கெட் கம்மியா இருந்தாலும் வெற்றி ஈஸியா இருக்காது.. அஸ்வின் பேட்டி
“இருப்பினும் காயம் காரணமாக நிறைய நேரம் கிடைக்கவில்லை. புனே போட்டிக்கு முன் நான் பயிற்சிகளை எடுத்தேன். பயிற்சியாளர்களுடன் எம்மாதிரியான பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்று விவாதித்து செயல்பட்டேன். இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தது. அதனால் இப்போட்டியில் நான் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறேன். நாட்டுக்காக நீங்கள் விளையாடும் போது மகிழ்ச்சியுடன் விளையாடுவீர்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் சொந்த வழியைக் கொண்டிருப்பார்கள். அதனால் யாரேனும் அட்டாக் செய்யும் ஆட்டம் நமக்கு வேலை செய்யும் என்று நினைத்தால் சேசிங்கில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



