
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது பல இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது.
அதனால் 2027 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் இந்தியா களமிறங்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது 40, 38 வயதில் ரோஹித் மற்றும் விராட் கோலியால் அசத்த முடியுமா? என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது. அதனாலேயே ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில்லை புதிய கேப்டனாக நியமித்தது. அவருடைய தலைமையில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா முதல் தொடரிலேயே தோற்றது.
இருப்பினும் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராட், ரோஹித் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுத்தனர். முன்னதாக அத்தொடரில் பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்ஷித் ராணா முழுமையாக 3 போட்டிகளில் விளையாடினார். 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்ல அவர் முக்கிய பங்காற்றினார்.
அந்த ஒரே காரணத்துக்காக பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கம்பீர் 3 வகையான இந்திய அணியிலும் வாய்ப்பை அள்ளி வழங்கி வருகிறார். அதில் பெரிதளவில் சாதிக்காத ராணா 3வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து ஓரளவு அசத்தினார். இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் ராணாவை பவுலிங் ஆல் ரவுண்டராக விளையாட வைப்பதற்காகவே இப்போது முதல் வாய்ப்புகளை வழங்கி செதுக்கி வருவதாக கேப்டன் கில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர் கேள்விக்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “ஆம். எங்களுக்கு 8வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் 20 – 25 ரன்கள் அடிப்பது அவசியமாகிறது. அதை ஒருவர் செய்வார் என்ற தன்னம்பிக்கை எங்களுக்கு கிடைத்தால் அந்த இடம் மிகவும் முக்கியமான இடமாக மாறும். இங்கே 140+ கி.மீ வேகத்தில் வீசும் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்”
இதையும் படிங்க: நிச்சயமா சுப்மன் கில்லுக்கு இந்த விடயம் கில்டியா இருக்கும்.. ரோஹித் எந்த தவறும் செய்யல – முகமது கைப் கருத்து
“எனவே 2027 உலகக்கோப்பை நடைபெறும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிட்ச்களில் அது போன்ற பவுலர்களின் வேலை முக்கியமாக இருக்கும். மிடில் ஓவர்களில் பந்து அதிகமாக நகர்வதில்லை என்பதை நாங்கள் பார்த்தோம். எனவே உங்களிடம் நல்ல உயரம் மற்றும் வேகம் இருந்தால் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்” என்று கூறினார்.