இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் கடந்த சில மாதங்களாகவே குடலிறக்க பிரச்சனை காரணமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் ஹெர்னியா ஆபரேஷனை செய்துகொண்ட சூரியகுமார் யாதவ் அடுத்ததாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
சூரியகுமார் யாதவ்க்கு பதிலாக புதிய கேப்டன் :
அதைத் தொடர்ந்து எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது உடற்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர்கள் அளிக்கும் முடிவில் தான் அவர் இந்திய அணிக்கு திரும்பவாரா? மாட்டாரா? என்பது உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
தற்போதைக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருக்கும் சூரியகுமார் யாதவ் நலமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது ஜப்பானில் இருக்கும் அவர் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா திரும்பும் பட்சத்தில் அவர் நேரடியாக தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தனது உடற்தகுதியை நிரூபிக்க இருக்கிறார்.
ஒருவேளை அவரால் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் மாற்றம் இருக்கும் என்றும் பேசப்படுகிறது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : ஒருவேளை சூரியகுமார் யாதவால் இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியவில்லையெனில் சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சுப்மன் கில் பேட்டிங்கில் மட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவரை பி.சி.சி.ஐ டி20 அணியின் கேப்டனாகவும் மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியா – இங்கிலாந்து தொடர் சிறந்தது என்றாலும்.. அந்த தொடருக்கு ஈடாகாது.. மைக்கேல் ஆதர்டன் பேட்டி
அதோடு எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவரை ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனான ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



