இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடிய பிறகு தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி லீக் போட்டியில் விளையாட மாட்டார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சுப்மன் கில்லிற்கு கிடைக்கவுள்ள கவுரவம் :
இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் நிச்சயம் அவருக்கு இந்த கடைசி லீக் போட்டியில் ஓய்வு வழங்கும் வகையில் அவர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி துபாய் நகரில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.
இதற்காக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் அந்த பயிற்சி முகாமிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக எந்த ஒரு பயிற்சியும் செய்யாத அவர் ஜாகிங் மட்டும் செய்தார் என்றும் அவரது உடற்தகுதியை மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதன் காரணமாக நிச்சயம் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஓய்வெடுத்து கொள்வார் என்றே தெரிகிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான சுப்மன் கில்லுக்கு ஒரு மாபெரும் கௌரவம் கிடைக்க காத்திருக்கிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் கடந்த ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமாகி அந்த தொடரினை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் பட்சத்தில் நிச்சயம் சுப்மன் கில் தான் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இது அவருக்கு ஒருநாள் கேப்டன்சி அறிமுகம் என்பது மட்டுமின்றி ஐசிசி தொடரிலும் இளம் வயதிலேயே கேப்டனாக செயல்படவுள்ள மாபெரும் கௌரவத்தையும் பெறயிருக்கிறார். உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் நடைபெற்று வரும் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்ததோடு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



