இந்திய கிரிக்கெட் அணி தற்சமயத்தில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை முடித்துக் கொண்டு ஜிம்பாப்வே நாட்டுக்கு செல்லும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 6ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி கொஞ்சம் கத்துக்குட்டியாக கருதப்படுகிறது.
எனவே இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. அது போன்ற சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் அல்லது ஹர்திக் பாண்டியா இந்தியாவை வழி நடத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் 2022, 2023ஆம் ஆண்டுகளில் இந்தியா விளையாடிய பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
ஜிம்பாப்வே தொடர்:
அதே போல 2023 உலகக் கோப்பையில் அவர் காயமடைந்த போது கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் சூரியகுமார் கேப்டனாக செயல்பட்டார். ஒருவேளை அவர்கள் கேப்டனாக இல்லாவிட்டாலும் கடந்த 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். எனவே அவருக்கும் ஜிம்பாப்வே தொடரில் கேப்டன்ஷிப் வாய்ப்புள்ளது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதால் பணிச்சுமை காரணமாக சூரியகுமார், பாண்டியா ஆகியோருக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. அதனால் சுப்மன் கில் இந்தியாவின் கேப்டனாக தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் ரிசர்வ் வீரராக தேர்வாகியிருந்த அவர் கடந்த வாரமே இந்தியாவுக்கு திரும்பி விட்டார். எனவே அவருடைய தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்றவர்களும் அத்தொடரில் விளையாட உள்ளனர்.
இதையும் படிங்க: நானே அவரோட பெரிய ரசிகன்.. ஆனா அவங்க ஹெல்ப் பண்ணலன்னா இந்தியா ஜெய்க்க முடியாது.. எச்சரித்த ஆம்ப்ரோஸ்
அதே போல கௌதம் கம்பீர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை. எனவே என்சிஏ இயக்குனராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் ஜிம்பாப்வே தொடரில் தற்காலிகமாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் ஜூலை மாதம் நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் இந்திய அணியுடன் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்படுவார் என்பதும் தெரிய வருகிறது.



