இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போட்டியின் கடைசி நாளான இன்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. இந்த போட்டியின் முதலில் 587 ரன்கள் குவித்த இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சிலும் 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதேவேளையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை மட்டுமே குவிக்க தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்தி வருகிறது.
ரோஹித் சர்மாவின் சாதனையை தவறவிட்ட சுப்மன் கில் :
நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து அணியானது போட்டியின் கடைசி நாளான இன்று வெற்றிக்கு 536 ரன்கள் தேவை என்கிற நிலையுடன் இன்றைய ஆட்டத்தை தொடர இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் ஒரு உலக சாதனையையும் அருகில் வந்து தவற விட்டுள்ளார். அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சுப்மன் கில் தவறவிட்ட சாதனை யாதெனில் : இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய சர்வதேச வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 13 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 சிக்ஸர்களை அடித்திருந்த அவர் இரண்டாவது இன்னிங்சில் 7 சிக்ஸர்களை விளாசியிருந்தார். அவருக்கு அடுத்து இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது 12 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
இதையும் படிங்க : உலகளவில் 6 ஆவது முறை.. இந்திய அணி சார்பாக முதல் முறை.. வரலாறு படைத்த சுப்மன் கில்லின் – இளம்படை
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 சிக்ஸர்களை விளாசிய கில் இரண்டாவது இன்னிங்சின் போது 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதன்மூலம் ஒரே போட்டியில் 11 சிக்ஸர்களை அடித்து ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இன்னும் 2 சிக்ஸர்களை மட்டும் அவர் கூடுதலாக அடித்திருந்தால் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.