90 ரன்களில் சேவாக் மாதிரி சிக்ஸருடன் சதமடிக்கும் அவர்கிட்ட அரிதான 2 திறமை இருக்கு – இளம் இந்திய வீரரை பாராட்டும் மஞ்ரேக்கர்

Sanjay
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அசத்தலாக செயல்பட்டு வளரும் வீரர் விருதையும் வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய அவர் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் மீண்டும் காயத்தால் வெளியேறினார்.

Gill

- Advertisement -

இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அசத்திய காரணத்தால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று தலா 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த அவர் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இரட்டை சதமும், சதமும் விளாசினார்.

சேவாக் போல:
அந்த நிலையில் நடைபெற்று முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் கடைசி போட்டியில் சதமடித்த அவர் ஒரே காலண்டர் வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக சாதனை படைத்தார். அப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சீரான வேகத்தில் பெரிய ரன்களை குவிக்கும் அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் சிறப்பான டெக்னிக் கொண்டுள்ளதால் அவர் எளிதாக 10,000 டெஸ்ட் ரன்களை அடிப்பார் என்று சுனில் கவாஸ்கர் சமீபத்தில் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் மிகச் சிறப்பான ஃபுட் ஒர்க் டெக்னிக் கொண்டுள்ள சுப்மன் கில்லிடம் வீரேந்திர சேவாக் போல 90 ரன்களில் இருக்கும் போது தைரியமாக சிக்சர் அடித்து சதமடிக்கும் அரிதான திறமை இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக 188 ரன்களில் இருந்த போது லாக்கி பெர்குசன் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளரை அசால்ட்டாக ஹாட்ரிக் சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

அது போல நிதானமாகவும் தேவைப்படும் போது அதிரடியாகவும் விளையாடும் 2 திறமை அவரிடம் இருப்பதாக தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன்னுடைய அறிமுகப் போட்டிகளிலேயே தனது திறமைகளை அவர் லேசாக காட்டினார். குறிப்பாக அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பது அப்போதே தெரிந்தது. மேலும் அண்டர்-19 அளவிலேயே அவருடைய அடிப்படை யுக்திகள் சிறப்பாக இருப்பதை நாம் பார்த்தோம். அவருடைய திறமைகளை பார்த்து அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்”

Sanjay

“அவரிடம் நான் 2 விஷயங்களை விரும்புகிறேன். ஒன்று அவருடைய ஃபுட் ஒர்க். அதாவது அவருடைய முன்னங்கால் முன்னோக்கி நகரும் அதே நேரத்தில் பின்னங்கால் ஒரு தூண்டுதலை கொடுக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய உதவிகளை செய்கிறது. 2வது விஷயம் என்னவெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் பெரிய ஷாட்களை அடிக்கும் தன்னம்பிக்கையை கொண்டுள்ளார். அவரை நீங்கள் பார்க்கும் போது பழைய காலத்து கிளாசிக் வீரர் போல் தோன்றும். ஆனால் அவருக்கு தேவைப்படும் போது அதிரடியாகவும் விளையாட முடிகிறது”

இதையும் படிங்க:199 ரன்னில் இருந்தப்போ என்னை செல்பிஷ்னு சொன்ன அவர் அடுத்த 2 பந்துல அவுட்டானாரு – 2008 பின்னணியை பகிர்ந்த சேவாக்

“இந்த போட்டியிலும் 90 ரன்களில் இருந்த போது பெரிய ஷாட்களை அடித்த அவர் சதத்தை தொட்டார். அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் சிக்சருடன் இரட்டை சதத்தை தொட்டார். இந்த அதிரடியான ஆட்டம் 90களில் ஏற்படும் பதற்றத்தில் இருந்து வீரேந்திர சேவாக் போல உங்களை காப்பாற்றும். இதைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் வருங்காலங்களில் இது அவருடைய அரிதான பலமாக இருக்கப் போகிறது” என்று கூறினார்.

Advertisement