
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது டிசம்பர் 11-ஆம் தேதியான இன்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.
பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்தி இந்திய அணியானது தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான துவக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் முதல் ஓவரிலேயே ஐந்தாவது பந்தில் இந்திய அணி தங்களது முதல் விக்கெட்டை இழந்தது.
அதிலும் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் சுப்மன் கில் தான் சந்தித்த முதல் பந்தியிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்த அவர் இரண்டாவது போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதுமட்டும் இன்றி கடைசியாக அவர் விளையாடிய 15 டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இவ்வேளையில் தான் சுப்மன் கில்லை விமர்சித்து சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்களின் குரலும் வலுத்துள்ளது.
ஏனெனில் 15 போட்டிகளாக அரைசதம் கூட அடிக்காத ஒருவரை துணை கேப்டனாக வைத்து துவக்க வீரராக இந்திய அணி வாய்ப்பளித்து வருகிறது. அதேவேளையில் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசியாக தான் விளையாடிய 10 போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ளார்.
இதையும் படிங்க : மத்த பவுலர்கள் எல்லாம் அடி மேல் அடி வாங்கிய வேளையில் தனியாக நின்று கெத்து காட்டிய – வருண் சக்கரவர்த்தி
துவக்க வீரராக 180-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கும் அவரை வெளியில் அமர வைத்துவிட்டு கில்லுக்கு வாய்ப்பு வழங்குவது ஏன்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விரைவில் சுப்மன் கில்லின் பதவியை பறித்து அவருக்கு பதிலாக நிரந்தர துவக்க வீரராக சஞ்சு சாம்சனை டி20 போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.