
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் விளையாடிய இந்தத் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் இந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது.
ஆனால் அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே வெறும் 116 ரன்கள் அடிக்க முடியாமல் இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்ததது. அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா தோல்வியை சந்தித்ததால் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். இருப்பினும் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இந்தியா அதற்கடுத்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது.
விராட் கோலி போல:
அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா முதன்மை வீரர்கள் இல்லாமலேயே கோப்பையை முத்தமிட்டு தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்தது. அந்த வகையில் இத்தொடரில் முதல் முறையாக கேப்டனாக விளையாடிய சுப்மன் கில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக வெற்றிகளை (4) பெற்ற இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. அந்த 5 போட்டிகளிலும் அசத்தலாக விளையாடிய இந்தியா 5 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 4 வெற்றிகளை பெற்றார்.
கடைசி போட்டியில் விராட் கோலி ஓய்வெடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடி இந்தியா வெற்றி கண்டது. அந்த வகையில் அத்தொடரில் விராட் கோலி கேப்டனாக 4 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்திருந்தார். தற்போது அவருக்கு அடுத்தபடியாக வெளிநாடான ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற இந்தத் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக 4 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 15 ரன்ஸ்.. காட்டுத்தனமாக அடித்த ரசித் கான்.. மும்பையிடம் கைமீறிய வெற்றியை கடைசியில் டிஎஸ்கே பறித்தது எப்படி?
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில் இருந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.