கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அந்த தொடரில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் முதல் போட்டியிலேயே சதம் அடித்தது மட்டுமின்றி அந்த தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :
இப்படி கேப்டனாக அவரது முதல் தொடரே அவருக்கு பிரமாதமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் அணியின் கேப்டனாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் அரைசதம் அடித்த அவர் இரண்டாவது போட்டியிலும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதே வேளையில் அவருக்கு இணையாக கேப்டன் சுப்மன் கில்லும் ஆட்டமிழக்காமல் 196 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 129 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று சுப்மன் கில் அடித்த சதத்தின் மூலம் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்துள்ளார். அதாவது விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டும் ஒரே ஆண்டில் 5 சதங்களை கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் விளாசியிருந்தார்.
இதையும் படிங்க : 518 ரன்கள் குடுத்தாலும் ஒழுக்கமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்கள் – விவரம் இதோ
அதனை தற்போது சுப்மன் கில் சமன் செய்துள்ளார். இந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் தான் விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகளில் ஐந்து டெஸ்ட் சதங்களை அவர் கேப்டனாக விளாசி விராட் கோலியின் அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



