இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது தற்போது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அக்டோபர் 10-ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
ஒழுக்கமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது போட்டியின் இரண்டாம் நாளான இன்று தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்களை குவித்திருந்த வேளையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், சுப்மன் கில் 129 ரன்களையும் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதால் மீண்டும் ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தவும் இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கிட்டத்தட்ட 135 ஓவர்களை வீசி 518 ரன்களை கொடுத்திருந்தாலும் அந்த அணி சார்பாக முதல் இன்னிங்சில் 2 உதிரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக அவை இரண்டும் ஒயிடு பந்துகளாக அமைந்திருந்தது.
அதனை தவிர்த்து எந்த ஒரு உதிரியையும் வழங்காமல் கட்டுக்கோப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசியுள்ளனர் என்று கூறலாம். இந்த போட்டியை பொறுத்தவரை அவர்கள் ஆட்டத்திற்குள் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் முதல் இன்னிங்சில் குறைந்தது 400 ரன்களாவது அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நிதீஷ் குமார் ரெட்டிக்கு நிச்சயமா தொடர்ந்து வாய்ப்பு கொடுப்போம்.. அதுல விஷயம் இருக்கு – கேப்டன் கில் பேட்டி
ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



