ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை டிஎல்எஸ் விதிமுறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. மழையால் 4 முறை பாதிக்கப்பட்ட அப்போட்டி இருதரப்புக்கும் 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
அதில் முதலில் விளையாடிய இந்தியா 26 ஓவரில் 136/9 ரன்கள் அடித்தது. இந்தியாவுக்கு விராட் கோலி 0, ரோஹித் சர்மா 8, கேப்டன் கில் 10 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 25/3 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவை அதிகபட்சமாக கேஎல் ராகுல் 38, அக்ஸர் பட்டேல் 31, நிதீஸ் ரெட்டி 19* ரன்கள் அடித்து ஓரளவு கரை சேர்த்தனர்.
தோல்விகாரமான ஆரம்பம்:
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் 131 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவை கேப்டன் மார்ஷ் 46*, ஜோஸ் பிலிப் 37*, மாட் ரென்ஷா 21* ரன்கள் அடித்து 21.1 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா பரிதாபமாக தோற்றது. இத்தனைக்கும் இந்த வருடம் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடர்ந்து 5 வெற்றிகளுடன் இந்தியா கோப்பையை வென்றதை மறக்க முடியாது.
மோசமான சாதனை சமன்:
இருப்பினும் 2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே இந்தியா 8 தொடர் வெற்றிகளுக்குப் பின் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் கடந்த வருடம் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் இந்தியா தோற்றது.
இதையும் படிங்க: இதை விட்டுட்டா ஜெய்க்க முடியாது.. இந்த காரணத்தால் இந்தியா தோற்றாலும் அதுல திருப்தி.. கேப்டன் கில்
அடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அவரது தலைமையில் இந்தியா தோற்றது. இப்போது அவரது தலைமையில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்றுள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் மோசமான சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



