
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 பும்ரா விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 2வது இன்னிங்ஸை 287-4 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 10, விராட் கோலி 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரிஷப் பண்ட் சதமடித்து 109 ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு 10 பவுண்டரி 4 சிக்சருடன் 119* ரன்கள் குவித்தார். சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வரும் அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானதால் மீண்டும் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் 2வது இன்னிங்ஸிலேயே சதமடித்துள்ள அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு கொஞ்சம் பதிலடி கொடுத்துள்ளார்.
அத்துடன் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான பின் 2வது இன்னிங்ஸில் சதமடித்த முதல் வீரர் என்ற ஸ்பெஷல் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அத்துடன் கடந்த 2022க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சுப்மன் கில் முதலிடம் பிடித்த இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில்: 12
2. பாபர் அசாம்/ஜோ ரூட்: தலா 11
3. விராட் கோலி: 10
4. டிராவிஸ் ஹெட்/டேரில் மிட்சேல்: தலா 9
இதையும் படிங்க: என்னது நான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செட் ஆகமாட்டேனா.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட சுப்மன் கில் – தரமான சம்பவம்
மறுபுறம் மீண்டும் சுமாராகவே பந்து வீசிய வங்கதேசம் அணிக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 515 என்ற இமாலய இலக்கை துரத்தும் வங்கதேசம் 3வது நாள் தேனீர் இடைவேளையில் 56/0 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் உலக சாதனை இலக்கை சேசிங் செய்து வரலாறு படைக்க வேண்டிய நிலைக்கு வங்கதேசம் தள்ளப்பட்டுள்ளது.