இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
திருப்பி அடித்த சுப்மன் கில் :
அதனை தொடர்ந்து முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 376 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்கும் முடியாமல் 149 ரன்களுக்கு சுருண்டது. அதனை தொடர்ந்து 227 ரன்கள் என்கிற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணியானது இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேரத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்த வேளையில் டிக்ளர் செய்தது.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 119 ரன்களையும், ரிஷப் பண்ட் 109 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகியிருந்த சுப்மன் கில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த வேளையில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலேயே 176 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 119 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்ஸ்சின் போது டக் அவுட்டான நிலையில் கில் இனி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செட் ஆக மாட்டார் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு யாராவது கொண்டு வாருங்கள் என்று பலரும் அவரை விமர்சித்திருந்தனர்.
இதையும் படிங்க : 634 நாட்கள்.. தல தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்.. யுவராஜ் போல மாஸ் கம்பேக்
இவ்வேளையில் தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலான கம்பேக்கை கொடுத்து சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சேப்பாக்கம் ரசிகர்களை அவர் அதிரவிட்டது குறிப்பிடத்தக்கது.



