இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்கம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அப்போட்டியில் அதில் முதலில் இந்தியா 587 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான அடித்தளத்தை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு மடக்கிப் பிடித்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து 180 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 28 ரன்னில் அவுட்டானார்.
சுப்மன் கில் அபாரம்:
அடுத்து வந்த கருண் நாயர் 26 ரன்னில் ஏமாற்றத்துடன் சென்ற நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய ராகுல் அரை சாதத்தை அடித்து 55 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் கில் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் ரசிகர்களை மகிழ்வித்து 65 (58) ரன்களை விளாசி இந்தியாவை வலுப்படுத்தி சென்றார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய கில் அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல மீண்டும் அபாரமாக விளையாடிய கில் சதத்தை அடித்து அசத்தினார்.
அவருடைய அற்புதமான ஆட்டத்தால் நான்காவது நாள் தேனீர் இடைவெளியில் 304/4 ரன்களை எடுத்துள்ள இந்தியா மொத்தம் 484 ரன்கள் குவித்து இப்போட்டியில் வெல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. களத்தில் கில் 100*, ஜடேஜா 25* ரன்களுடன் உள்ளார்கள். இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் குவித்த கில் 2வது இன்னிங்ஸில் 100* ரன்களை அடித்துள்ளார்.
சரித்திர சாதனைகள்:
- இதன் வாயிலாக ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் சதமும் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இதற்கு முன் அந்த சாதனையை 1971 போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கவாஸ்கர் 124, 220 ரன்கள் அடித்து படைத்திருந்தார்.
- அதை விட இப்போட்டியில் கில் மொத்தமாக 369 ரன்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 350 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனையை கில் படைத்துள்ளார். அத்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற கவாஸ்கர் (1971இல் 344) சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: டிராவிட், சச்சின் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது ஆசிய வீரராக சுப்மன் கில் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
3. இது போக ஒரு டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை குவித்த முதல் இந்திய கேப்டன் என்ற சரித்திர சாதனையையும் கில் படைத்துள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (369) குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் கில் உடைத்துள்ளார். இதற்கு முன் 2017இல் இலங்கைக்கு எதிராக விராட் கோலி 293 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.