கை கொடுக்காமல் களத்தில் மோதல்.. ஹர்டிக் பாண்டியாவுடன் சண்டையா? சுப்மன் கில் விளக்கம்

Shubman Gill
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்தது. அதனால் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள மும்பை தகுதி பெற்றது. மறுபுறம் முக்கிய நேரத்தில் தடுமாறிய குஜராத் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய குஜராத் 20 ஓவரில் 208/6 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 48, சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வீசுவதற்காக வழக்கம் போல இரு அணி கேப்டன்களான ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்திற்கு வந்தனர்.

- Advertisement -

பாண்டியா – கில் மோதலா:

அதைத் தொடர்ந்து டாஸ் வீசும் நிகழ்வு நடைபெற்றது. அத்தருணத்தில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்றார். அப்போது முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம் என்று தொகுப்பாளரிடம் சொல்லச் செல்வதற்கு முன்பாக சுப்மன் கில் அவரைக் கடந்து சென்றார். பொதுவாக அது போன்ற தருணங்களில் இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொண்டு கடந்து செல்வது வழக்கமாகும்.

அதன் அடிப்படையில் ஹர்டிக் பாண்டியாவும் கை கொடுப்பதற்காக தன்னுடைய கையை எடுத்தார். ஆனால் டாஸ் தோற்ற விரக்தியில் இருந்த சுப்மன் கில் அவரிடம் கை கொடுக்காமல் கண்டுகொள்ளாமல் சென்றார். அதனால் பாண்டியா அதிருப்தியுடன் சென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குஜராத் பேட்டிங் செய்த போது சுப்மன் கில் 1 ரன்னில் எல்பிடபுள்யூ முறையில் தம்முடைய விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சுப்மன் கில் விளக்கம்:

அப்போது ரிவியூ எடுக்கலாமா? என்பதை பற்றி அவர் தன்னுடைய பேட்டிங் பார்ட்னர் சாய் சுதர்சனிடம் பேசிக் கொண்டிருந்தார். அங்கே ஓடி வந்த ஹர்திக் பாண்டியா பேசிக் கொண்டிருந்த கில் அருகே சென்று மிகவும் வேகமாக கூச்சலிட்டு விக்கெட்டை கொண்டாடினார். இவற்றையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கில் – பாண்டியா ஆகியோருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையும் படிங்க: இந்திய இளம் வீரர்களால் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் அதை சாதித்து காட்டமுடியும் – ஏ.பி டிவில்லியர்ஸ் நம்பிக்கை

இந்நிலையில் பாண்டியாவுக்கும் தமக்கும் எந்த மோதலும் சண்டையும் இல்லை என்று சுப்மன் கில் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தை சேர்த்து அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “எதுவும் இல்லை அன்பு மட்டுமே இருக்கிறது (சமூக வலைதளங்களில் பார்க்கும் அனைத்தையும் நீங்கள் நம்பாதீர்கள்)” என்று ஹர்திக் பாண்டியாவை டேக் செய்து விளக்கமளித்துள்ளார்.

Advertisement