இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. இருப்பினும் மனம் தளராத இந்திய அணி 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.
பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587, 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 407 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 271க்கு ஆல் அவுட்டாக்கியது. அதனால் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது.
கேப்டன் சுப்மன் கில்:
அத்துடன் பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற வரலாற்றையும் இந்தியா படைத்தது. அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். பவுலிங் துறையில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் அசத்தினார்.
முன்னதாக ரோஹித் சர்மாவுக்கு பின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்தில் அவர் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றதும் சதம், இரட்டை சதம், சதமடித்துள்ள அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
உதயமான புதிய கேப்டன்:
அதே போல கேப்டனாக தம்முடைய 2வது போட்டியிலேயே பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டன் என்ற 2 சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன் தோனி, விராட் கோலி, இன்சமாம் உள்ளிட்ட எந்த ஆசியாவை சேர்ந்த கேப்டனும் பர்மிங்காமில் வென்றதில்லை. இந்த வெற்றியை அவர் 25 வருடம் 301 நாட்கள் வயதில் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: 336 ரன்ஸ்.. வெளிநாட்டு மண்ணில் இளம் இந்தியா பிரம்மாண்ட சாதனை வெற்றி.. இங்கிலாந்துக்கு மாஸ் பதிலடி
அதன் வாயிலாக ஒரு வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் மிகவும் இளம் வயதில் வெற்றியைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 1976ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் ஆக்லாந்து டெஸ்ட் போட்டியில் சுனில் காவாஸ்கர் 26 வருடம் 201 நாட்களில் இந்தியாவின் கேப்டனாக வென்றதே முந்தைய சாதனை. அவருடைய 49 வருட சாதனையை உடைத்துள்ள கில் தம்மை இந்தியாவின் கேப்டனாக நியமித்ததை சரி என்பதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.