697 ரன்ஸ்.. கோலி, யூசுப்பை முந்தி 2 சாதனை படைத்த கில்.. ராகுலுடன் சேர்ந்து இந்தியாவை காப்பாற்றுவாரா?

Shubman Gill Kl Rahul
- Advertisement -

மான்செஸ்டர் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 387 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி பஸ்பால் ஸ்டைலில் இந்தியாவை துவம்சம் செய்து 669 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியா களமிறங்கியது.

- Advertisement -

நங்கூரமாக ராகுல் – கில்:

அப்போது நங்கூரத்தை போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் கிறிஸ் ஓக்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து டக் அவுட்டானார்கள். அதனால் 0/2 என திணறிய இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் மறுபுறம் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடி போராடினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கில் பொறுப்புடன் விளையாடினார். ஆரம்பத்தில் விக்கெட்டை விடக்கூடாது என்ற நோக்கத்தில் விளையாடிய அந்த ஜோடி மிகவும் ஆமை வேகத்தில் விளையாடாமல் சமயம் கிடைக்கும் போது ரன்களையும் எடுத்தது. நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்தார்கள்.

- Advertisement -

கில் 2 சாதனை:

4வது நாள் தேனீர் இடைவெளி கடந்து நங்கூரமாக விளையாடி அந்த ஜோடி கடைசி வரை விக்கெட்டை விடாமல் இந்தியாவுக்கு கை கொடுத்து வருகிறது. அதனால் 4வது நாள் முடிவில் 174/2 ரன்களை எடுத்துள்ள இந்தியா இன்னும் 137 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ராகுல் 87*, கில் 78* ரன்களுடன் இந்தியாவை காப்பாற்ற நங்கூரமாக விளையாடுகிறார்கள்.

இதையும் படிங்க: 3 ரன்ஸ்.. முத்தரப்பு ஃபைனலில் சோக் செய்த தெ.ஆ.. கைமீறிய வெற்றியை பறித்த நியூஸிலாந்து வென்றது எப்படி?

இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து இத்தொடரில் கில் மொத்தமாக 697* ரன்களை குவித்துள்ளார். அதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2006 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முகமது யூசுப் 631 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது போக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் (2016/17இல் 655) அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் உடைத்து கில் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement