இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றுள்ளது. இத்தனைக்கும் அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 2026 புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது. ஆனால் அடுத்து நடைபெற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து கோப்பையைத் தட்டி சென்றது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. இந்தூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து டார்ல் மிட்சேல் 137, கிளன் பிலிப்ஸ் 106 ரன்கள் எடுத்த உதவியுடன் 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்திய அணி 46 ஓவரில் 296 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
சொதப்பிய ரோஹித்:
அதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூஸிலாந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் பெரும்பாலான இந்திய வீரர்கள் சுமாராக விளையாடியது அவமானத் தோல்விக்கு வித்திட்டது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா 11, 24, 26 என இத்தொடர் முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அதனால் இத்தொடரில் ரோஹித் சர்மா ரன்கள் குவிக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. இந்நிலையில் நல்ல ஃபார்மில் இருந்தாலும் ஒருவரால் அனைத்து போட்டிகளிலும் ரன்கள் குவிக்க முடியாது என்று இந்திய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். எனவே தோல்விக்காக ரோஹித்தை குறை சொல்வது சரியில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கேப்டன் கில் ஆதரவு:
“கடந்த ஆஸ்திரேலியா தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க தொடர் வரை ரோஹித் நல்ல ஃபார்மில் இருந்தால் என்று நினைக்கிறேன். உங்களால் எப்போதும் நல்ல துவக்கத்தைப் பெரிய ரன்களாக மாற்ற முடியாது. இந்தத் தொடரில் அவர் சில நல்ல துவக்கத்தைப் பெற்றார். அப்படிப்பட்ட துவக்கத்தை ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் எப்போதுமே பெரிதாக மாற்றி சதமாக உருவாக்க ஆசைப்படுவீர்கள்”
இதையும் படிங்க: உடைந்த இந்தூர் கோட்டை.. கம்பீர் வந்ததுமே காற்றில் பறந்த இந்தியாவின் 3 வெற்றிச் சரித்திரங்கள்
“ஆனால் அதை ஒவ்வொரு முறையும் செய்வது சாத்தியம் கிடையாது. அதே சமயம் நீங்கள் அதை எப்போதும் செய்வதற்கு பாடுபடுவீர்கள்” என்று கூறினார். மொத்தத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்ற இந்தியா அணி வரலாறு காணாத தோல்வியுடன் 2026 புத்தாண்டை துவக்கியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



