
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது.
அதன் பின்னர் விளையாடிய இந்திய அணியானது முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்த வேளையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் குவித்து வலுவான நிலையில் மிகப்பெரிய முன்னிலை பெற்றது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 125 ரன்கள், கே.எல் ராகுல் 100 ரன்களையும் எடுத்திருந்த வேளையில் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி மேலும் ரன்களை சேர்த்து பெரிய முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேரம் துவங்கியதும் இந்த இன்னிங்ஸ்ஸை மேலும் தொடர விரும்பாத இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் எங்களுக்கு இந்த ரன்களே போதும் என்று டிக்ளர் செய்வதாக அறிவித்தார். இப்படி சுப்மன் கில்லின் அதிரடியான அறிவிப்புக்கு பின்னர் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது இரண்டாவது இன்னிங்சில் 59 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 40 ஆவரேஜை விட அதுல கவனம் செலுத்துறேன்.. மீதிய கடவுள் பாத்துப்பாரு.. விமர்சனங்களுக்கு ராகுல் பதில்
சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வரும் இந்திய அணியானது நிச்சயம் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முடியும் முன்னதாகவே வெற்றி பெற்றுவிடும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. அப்படி இந்திய அணி இன்று வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த 2 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.