வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரிவ்ஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 448/5 ரன்கள் குவித்து 2வது நாளுடன் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் சதமடித்து முறையே 100, 125, 104* ரன்கள் குவித்து அசத்தினர். அவர்களுடன் கேப்டன் சுப்மன் கில் 50, ஜெய்ஸ்வால் 36 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
குறைவான சராசரி விமர்சனங்கள்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அதனால் அவருடைய பேட்டிங் சராசரி 35.41 என்றளவில் மட்டுமே இருக்கிறது. எனவே ராகுல் தம்முடைய திறமைக்கு நிகராக செயல்படவில்லை என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இருப்பினும் தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடைய ஓய்வுக்கு பின் ஓப்பனிங்கில் பொறுப்புடன் விளையாடும் ராகுல் கடைசி 10 இன்னிங்ஸில் 53.20 சராசரியில் 532 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டிங் சராசரிக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக ராகுல் தெரிவித்துள்ளார். மற்றவற்றை கடவுளிடம் விட்டுவிடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
ராகுல் பதில்:
“விமர்சனங்கள் என்னை நான் பாதிக்க விடுவதில்லை. அதற்காக அதை நான் பார்ப்பதில்லை என்று அர்த்தமல்ல. எந்த பேட்ஸ்மேன்களும் தங்களுடைய நம்பர்கள் அதிகமாக இருப்பதைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் தற்போது என்னுடைய திட்டங்களை நெருக்கமாக வைத்து மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். நம்பர்களை விட அந்தக் கட்டங்களை நிரப்புவதையே நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: எனக்கும் அது தெரியாது.. இந்திய அணி என்னையும் மதிக்கிறாங்கன்னு தெரியுது.. ஜடேஜா பேட்டி
“அதே சமயம் நான் சிறப்பாக செயல்பட்டால் ரன்கள் மற்றும் நம்பர்கள் தாமாகவே உயரத்தை நோக்கி செல்வதை என்னால் பார்க்க முடியும். எனவே படிப்படியாக செல்வது முக்கியம். 3வது படிக்கு சென்று விட்டு முதல் 2 படிகளை மறக்கக்கூடாது. ஆனால் நாளின் இறுதியில் கிரிக்கெட்டில் உங்களுடைய நம்பர்கள் பற்றி பேசப்படும். இருப்பினும் நான் என்னால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். மற்ற அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.



