தெறிக்கவிட்ட திவாடியா, கலக்கிய கில் ! கடைசி பால் வரை பறந்த அனல், பஞ்சாப்பை சாய்த்த குஜராத் திரில் வெற்றி

- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 9-ஆம் தேதி நடந்த 16-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 8 (8) ரன்களில் அவுட்டானதால் 34/2 என தடுமாறிய பஞ்சாப் சுமாரான தொடக்கம் பெற்றது.

அந்த நிலையில் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் அதிரடியான பேட்டிங் செய்தார். 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் 30 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் ஜிதேஷ் சர்மா அதிரடியாக 23 (11) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பஞ்சாப் தடுமாறி 189 ரன்கள் சேர்ப்பு:
இருப்பினும் மறுபுறம் தெறிக்கவிடும் பேட்டிங் செய்த லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 64 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதைப் பயன்படுத்திய குஜராத் அடுத்து வந்த ஓடின் ஸ்மித்தை டக் அவுட் செய்து தமிழக வீரர் சாருக்கானை 15 (8) ரன்களில் காலி செய்தது. இதனால் 200 ரன்களை தொடவேண்டிய அந்த அணி கடைசி நேரத்தில் ராகுல் சஹர் அதிரடியாக 14 பந்துகளில் 22* ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 189/9 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய ரசித் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 390 என்ற பெரிய இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் மேத்தியூ வேட் 6 (7) ரன்களில் அவுட்டாகி நடையை கட்ட அவரை தொடர்ந்து களமிறங்கிய தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை மீட்டெடுத்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் 30 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 35 ரன்கள் எடுத்த சுதர்சன் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கலக்கிய கில், தெறிக்கவிட்ட திவாடியா:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து அரைசதம் கடந்து பட்டையை கிளப்பிய சுப்மன் கில் 59 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்து முக்கியமான 19-வது ஓவரில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். அதன் காரணமாக குஜராத் வெற்றிக்கு கடைசி ஓவரின் 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா பினிஷிங் கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அந்த நிலையில் களமிறங்கிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடி பவுண்டரியை பறக்கவிட்டு அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். அதன் காரணமாக கடைசி 2 பந்துகளில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடின் ஸ்மித் வீச 5-வது பந்தில் சிக்சரை பறக்க விட்ட திவாடியா கடைசி பந்தில் வெற்றிக்கு சிக்சர் தேவைப்பட்ட போது அதையும் அதிரடியான மெகா சிக்ஸராக பறக்கவிட்டு குஜராத்துக்கு தனி ஒருவனாக திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார்.

- Advertisement -

அனல் பறந்த போட்டி:
பொதுவாகவே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கடைசி பந்து வரையிலான த்ரிலருக்கு பெயர்போன ஐபிஎல் தொடரில் இந்த வருடம் இதுவரை நடந்த போட்டிகள் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டிய நிலையில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை அனல் தெறித்தது ரசிகர்களை எகிற வைத்தது.

இந்த அதிரடியான வெற்றிக்கு 96 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட திவாடியாவை ஹீரோவாக தற்போது சமூக வலைதளங்களில் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த அதிரடியான வெற்றியால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றியை பதிவு செய்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் ஹாட்ரிக் வெற்றியுடன் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட பதிவு செய்யாத ஒரே அணியாக சாதனை படைத்து புள்ளி பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளது.

மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்களை தொட இருந்த பஞ்சாப் கடைசி நேரத்தில் சொதப்பிய நிலையில் பந்துவீச்சிலும் அதுவும் கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்டு புள்ளி பட்டியலில் தற்போது 6வது இடத்தில் உள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisement