இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 25-ஆம் தேதி முதல் கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 4-ஆம் நாள் முடிவில் இந்தப் போட்டியானது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 345 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.
பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின் மற்றும் சஹா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி ஒரு டீசண்டான ரன் குவிப்பை வழங்கியது. இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி 2-வது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்கள் குவித்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை. அதே வேளையில் இந்திய அணி நியூசிலாந்து அணியின் மீதமுள்ள 9 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு அவர் ஆட்டம் இழந்து வெளியேறியபோது அணி வீரர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதன்பின்பு நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அவரின் இந்த ஆட்டம் குறித்து பேசிய ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : இதுபோன்ற இக்கட்டான வேளைகளில் நான் பலமுறை பேட்டிங் செய்து உள்ளேன். ஆனால் அது இந்திய அணிக்காக அல்ல. ரஞ்சி கோப்பை போட்டிகளின் போது இதே போன்ற சூழ்நிலையில் நான் நிறைய முறை விளையாடி உள்ளேன்.
அந்த அனுபவத்தை அப்படியே இந்த போட்டியிலும் வெளிப்படுத்தி விளையாடினேன். இந்த போட்டியில் நான் சதம் மற்றும் அரை சதம் அடித்து சாதனை புரிந்தது எனக்கு தெரியும். அதை சக வீரர்களும் என்னிடம் கூறி மகிழ்ந்தனர். எனக்கு அதைவிட இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போது முக்கியமாக உள்ளது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் நான் களமிறங்குவதற்கு முன்னர் ராகுல் டிராவிட் சார் என்னிடம் வந்து : உன்னால் எவ்வளவு பந்துகளை எதிர்கொள்ள முடியுமா அவ்வளவு பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : 2 இன்னிங்ஸ்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு – கிடைத்த மரியாதை
நானும் அதையேதான் நினைத்திருந்தேன். என் மனதுக்குள் இன்றைய நாளில் எவ்வளவு அதிகமான பந்துகளை சந்திக்க முடியுமோ அவ்வளவு பந்துகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். டிராவிட் சாரும் அதையே கூறினார். பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். அதை விட கூடுதலாக ரன்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.