ஐ.பி.எல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு பெங்களூருவில் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

பெங்களூரு அணி இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. அதனால் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற உத்வேகம் காட்டும் என நம்பப்பட்டது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்த டெல்லி அணி சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணியை சுருட்டியது. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கோலி 41 ரன்களை அடித்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 21 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர் ஆடிய டெல்லி அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் மூலம் எளிதாக வெற்றியை பெற்றது. டெல்லி அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை வெற்றி இலக்கினை அடைந்தது. இதன்மூலம் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது :

இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதனால் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தும் முன் நான் என்னுடைய ஷாட் அடிக்கும் இடத்தினை முன் கூட்டியே தேர்வு செய்து கடைசி வரை நின்று வெற்றியை அடைய திட்டம் வகுத்தேன். மேலும், பெங்களூரு அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்தார்கள் என்றே நினைக்கிறன். இருப்பினும் இந்த இலக்கே இந்த மைதானத்தில் சற்று கடினமாக இருந்தது.

இலக்கினை அடைய மனதளவில் முன்கூட்டியே தயாராகி விட்டோம். எப்போதும் கேப்டனாக வெற்றி பெறவைப்பது மகிழ்ச்சிதான். அதனை இன்று நான் கொண்டாடினேன். இருப்பினும், பெங்களூரு அணிக்கு எனது ஆதரவினை தெரிவிக்கிறேன் என்று ஐயர் கூறினார்.



