- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs NZ : சீனியர் டீமை விட சூப்பரா ஆடுறாங்க. முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய வீரர்கள் – டார்கெட் எவ்வளவு?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் நியூசிலாந்து பயணித்து முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்திய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி அடுத்ததாக சிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் முதல் தொடராக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று ஆங்கிலாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஜோடி இப்போட்டியிலும் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் சவாலான நியூசிலாந்து பவுலர்களை திறம்பட எதிர்கொண்ட இந்த ஜோடி ஆரம்ப முதலே நிதானமாகவும் தேவைப்படும் போது அதிரடியாகவும் ரன்களை சேர்த்து இந்தியாவை வலுப்படுத்தியது.

அசத்திய இளம் அணி:
நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்த இந்த ஜோடி 23.1 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது அரை சதமடித்த சுப்மன் கில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 (65) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய கேப்டன் தவான் அரை சதமடித்து 13 பவுண்டரியுடன் 72 (77) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய ரிஷப் பண்ட் வழக்கம் போல 2 பவுண்டரியுடன் 15 (23) ரன்களில் நடையை கட்டிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் 4 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றி சென்றார்.

அதனால் திடீரென்று 160/4 என மிடில் ஓவரில் தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார்கள். 33வது ஓவரில் இணைந்த இவர்கள் மேற்கொண்டு எளிதில் விக்கெட்டை விடாமல் நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு முக்கியமான 94 ரன்கள் அற்புதமான பார்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார்கள். அதில் ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்த நிலையில் மறுபுறம் செட்டிலான சஞ்சு சாம்சன் அதிரடி துவக்க வேண்டிய 46வது ஓவரில் பவுண்டரியுடன் 36 (38) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

இருப்பினும் இந்தியாவை மீட்டெடுத்து ஆட்டமிழந்த அவருக்கு அடுத்தபடியாக மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 80 (76) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்களை தெறிக்க விட்டு சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 50 ஓவர்களில் இந்தியா 306/7 ரன்கள் குவித்தது.

இப்போட்டியில் நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கிடைத்ததை மிடில் ஆர்டரில் ரிசப் பண்ட், சூரியகுமார் ஆகியோர் வீணாக்கும் வகையில் செயல்பட்டாலும் அதன்பின் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தியாவை சிறப்பாக செயல்பட்டு காப்பாற்றினார்கள். இதைப் பார்க்கும் போது ரோகித் சர்மா தலைமையிலான சீனியர் அணியை விட இந்த இளம் அணி சிறப்பாக செயல்படுவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். மறுபுறம் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினாலும் ஓப்பனிங் மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் சுமாராக செயல்பட்ட நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதை தொடர்ந்து 307 ரன்களை நியூசிலாந்து துரத்தி வருகிறது.

- Advertisement -
Published by