இந்திய கிரிக்கெட் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் 2017 முதல் விளையாடி வருகிறார். அதில் கடந்த 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் அபாரமாக செயல்பட்ட அவர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுக போட்டியிலேயே சதத்தை கணிசமாக அசத்தியுள்ளார்.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் என்றாலே ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுவார் என்பது உலகம் அறிந்த உண்மையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை விளையாடியதில் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் அவர் தன்னுடைய விக்கெட்டை பலமுறை இழந்துள்ளார். அதனால் இப்போதெல்லாம் அவர் களத்திற்கு வந்தாலே எதிரணிகள் அந்த பந்தை வீசி அவருடைய விக்கெட்டை எடுப்பது வாடிக்கையாகி விட்டது.
தாங்க முடியல:
அதன் உச்சமாக 2021 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கோச் ப்ரெண்டன் மெக்கல்லம் பால்கனியில் அமர்ந்து கொண்டு ஒற்றை சைகையால் அவருடைய விக்கெட்டை எடுத்ததை மறக்க முடியாது. இந்நிலையில் 150 கி.மீ பந்துகள் பற்றி தெரியாத ரசிகர்கள் எல்லாம் தம்மை விமர்சித்தது தாங்க முடியவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட தேர்வாகியுள்ள அவர் தன் மீதான விமர்சனங்கள் பற்றி பேசியது பின்வருமாறு.
“150 கிலோமீட்டர் பந்துகளை எதிர்கொள்ளாத ரசிகர்களிடம் இருந்து எப்படி ஷார்ட் பிட்ச் பந்துகளில் குறிப்பிட்ட வழியில் விளையாட வேண்டும் என்ற விமர்சனங்கள் வந்தது எரிச்சலை கொடுத்தது. ஆனால் அது அவர்களுடைய கருத்து. அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் அதை அவர்களுக்கிடையே மட்டுமே பேசுகிறார்கள். வீரர்களுக்கு நேராக சொல்வதில்லை”
பிடித்த இன்னிங்ஸ்:
“2023 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 82 ரன்கள் அடித்தது எனக்கு பிடித்த என்னுடைய இன்னிங்ஸ். ஏனெனில் அப்போது சிறப்பாக விளையாடாத காரணத்தால் அணியிலிருந்து என்னை நீக்குவது பற்றி நிறைய பேச்சுக்கள் இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 50 ரன்கள் அடித்தாலும் அது போன்ற விமர்சனங்கள் என்னை கடினமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்தியது”
இதையும் படிங்க: கம்பீர் இல்லாமையே தெ.ஆ மாதிரி இந்தியாவால் ஜெய்க்க முடியும்.. பாண்டியாவின் நட்பு பற்றி.. சூரியகுமார் பேட்டி
“அது போன்ற பேச்சுக்கள் என்னுடைய உள்ளுணர்வை தட்டி எழுப்பியது. என்னுடைய 110% பங்களிப்பை கொடுக்க விரும்பும் நான் என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விளையாடத் துவங்கியது முதல் பின்வாங்கவில்லை. அந்த வழியில் விளையாடியது என்னைக் கவர்ந்ததால் அப்போது முதல் நான் எனக்கே ரசிகனாக மாறிவிட்டேன். அது உலகக் கோப்பையில் போட்டியை மாற்றும் ஆட்டமாக இருந்தது” என்று கூறினார்.