ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு ஆலோசகர் கௌதம் கம்பீரை போலவே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2020 சீசனில் டெல்லியை ஐபிஎல் ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டனாக சாதனை படைத்த அவர் இந்த சீசனில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழி நடத்தி 3வது கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
முன்னதாக 2023 உலகக் கோப்பையில் 500+ ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதைத் தொடர்ந்து இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் அந்த காயத்திலிருந்து விரைவாக குணமடைந்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியாக இருப்பதாக என்சிஏ அறிவித்தது.
ஸ்ரேயாஸ் பதிலடி:
அப்போது தம்முடைய காயம் முழுமையாக குணமடையாததால் பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை காலிறுதியில் விளையாட முடியாது என்று ஸ்ரேயாஸ் ஐயர் மறுத்து விட்டார். அதனால் கோபமடைந்த பிசிசிஐ ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததற்காக இஷான் கிசானுடன் சேர்ந்து அவரையும் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.
அதன் காரணமாக வேறு வழியின்றி கோப்பையில் மும்பை அணியுடன் இணைந்து செமி ஃபைனல், ஃபைனலில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளதால் மீண்டும் அவர் இந்திய அணியில் தம்முடைய இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் ரஞ்சி, ஐபிஎல் ஆகிய 2 கோப்பைகளை வென்று பிசிசிஐக்கு பதிலடி கொடுத்து தம்முடைய இடத்தை பிடித்துள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு உலகக் கோப்பை சிறப்பாக அமைந்தது. அதன் பின் இடைவெளி எடுக்க விரும்பிய நான் என்னுடைய உடலில் குறிப்பிட்ட இடங்களை வலுப்படுத்த விரும்பினேன். இருப்பினும் அப்போது தவறான தகவல் தொடர்பால் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அது எனக்கு சாதகமாக செல்லவில்லை. அப்போது பேட் என்னுடைய கையில் இருக்கப் போகிறது”
இதையும் படிங்க: ஜெய்க்க தான் முடியல.. தோனி மாதிரி இதை கூடவா செய்யக்கூடாது.. பாபர் அசாமை விமர்சித்த டிகே
“எனவே சிறப்பாக விளையாடிய கோப்பையை வெல்வது என்னுடைய வேலை என்பதை உணர்ந்தேன். ரஞ்சிக் கோப்பை மற்றும் ஐபிஎல் வென்ற பின் அதுவே கடந்த காலத்தில் எனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கான பதில் என்று நான் முடிவெடுத்தேன். நல்லவேளையாக அனைத்தும் ஒரு இடத்தில் விழுந்தது. அது நடந்த விதத்திற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.



