ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. ஜூன் 6ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 159/7 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய அமெரிக்காவும் 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.
அதைத் தொடர்ந்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் 13/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2009 சாம்பியனான பாகிஸ்தான் ஒரு உறுப்பு நாட்டு அணியிடம் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை முதல் முறையாக சந்தித்தது. இந்த தோல்விக்கு பவர் பிளே ஓவர்களில் தங்களுடைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்காததும் மிடில் ஓவர்களில் பவுலர்கள் விக்கெட்டுகள் எடுக்காததுமே முக்கிய காரணமானதாக கேப்டன் பாபர் அசாம் போட்டியின் முடிவில் கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
கேப்டன்ஷிப் பண்பு:
இந்நிலையில் மோசமான தோல்வியை சந்திக்கும் போது முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் தோனி போல வீரர்களுக்கு ஆதரவாக பேசாமல் குறை சொல்லும் வகையில் பாபர் அசாம் பேசியதாக தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். ஏனெனில் சொந்த கேப்டனே ஆதரவு கொடுக்காமல் குறை சொன்னால் அது பாகிஸ்தான் வீரர்களிடம் மேலும் அழுத்தத்தை உண்டாக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக நீங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜதந்திரமாக இருக்கும் வழியை கண்டறிய வேண்டும். அதாவது எப்படியாவது உங்கள் வீரர்களை ஆதரிக்கும் வழியை கண்டறிய வேண்டும். உடைமாற்றம் அறையில் 4 சுவருக்குள் நீங்கள் விரும்புவதை அவர்களிடம் சொல்லுங்கள். ஆனால் பொதுவெளியில் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வழியை கண்டறியுங்கள்”
“நேர்மையாக இருப்பது ஒரு விஷயம். அணியின் இயக்கவியலை புரிந்துக்கொள்ள முயற்சிப்பது மற்றொரு விஷயம். தற்போது பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக “ஆமாம் இது எங்களுக்கு ஒரு மோசமான நாள். நாங்கள் சில விஷயங்களை சிறப்பாக செய்திருக்கலாம்” என்று சொல்லியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: அதை கெட்டியா பிடிச்சுக்கோங்க.. பாகிஸ்தான் மேட்ச்ல நான் செய்யப் போறது வரலாறா இருக்கும்.. பாண்டியா பேட்டி
“அதை விட்டுவிட்டு முதல் 6 ஓவரில் சரியாக விளையாடவில்லை அங்கே விக்கெட்டுகளை இழந்தோம் என்று சொல்வது நன்றாக இல்லை. ஏனெனில் இதை பாகிஸ்தான் வீரர்கள் படிக்கும் போது தங்களுடைய கேப்டன் தங்களை கீழே விட்டதாக உணர்வார்கள். அதே போல பவுண்டரி அடிக்கும் போது நீங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதும் நல்ல கேப்டனுக்கு அழகல்ல” என்று கூறினார்.