நானும் ஃபார்முக்கு வந்துட்டேன்.. கிங் கோலிக்கு பின் ஆஸிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஸ்பெஷல் சதம் – 3வது இடத்தில் மிரள வைக்கும் நம்பர்கள்

Shreyas Iyer
- Advertisement -

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலகில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி செப்டம்பர் 24 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் துவங்கியது.

அதில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் பும்ராவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியை பட் கமின்ஸ்க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் வழி நடத்தினார். அந்த நிலைமையில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கைக்வாட் 8 ரன்னில் ஹேசல்வுட் வேகத்தில் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார்.

- Advertisement -

திரும்பிய ஸ்ரேயாஸ்:
அந்த நிலைமையில் விராட் கோலி விளையாடக்கூடிய 3வது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் கில் தம்முடைய பங்கிற்கு ஆஸ்திரேலிய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த வகையில் முதல் 10 ஓவர்களில் 80/1 என்ற நல்ல துவக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்த இந்த ஜோடியில் கில் முதல் ஆளாக 50 ரன்களை கடந்தார்.

ஆனால் பவர் பிளே முடிந்ததும் அவரை விட வேகமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் விரைவாக அரை சதமடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இரு மடங்கு வேகத்தில் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். அதில் காயத்திலிருந்து குணமடைந்த பின் தடுமாற்றமாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் ஆளாக 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 105 (90) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்த பும்ரா, ராகுல் ஆகியோர் ஏற்கனவே ஃபார்முக்கு திரும்பி விட்ட நிலையில் 2023 உலகக் கோப்பைக்கு முன் நானும் ஃபார்முக்கு திரும்பி விட்டேன் என்பதை காட்டும் வகையில் அவருடைய ஆட்டம் இருந்தது என்றே சொல்லலாம். அதனாலேயே அதை வெறித்தனமாக கொண்டாடிய அவர் 2010க்குப்பின் ஒருநாள் போட்டிகளில் 3வது இடத்தில் விராட் கோலிக்கு பின் சதமடித்த முதல் இந்திய வீரராகவும் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: 110 ரன்கள் விளாசிய டெயில் எண்டர்கள்.. இங்கிலாந்துக்கு பயத்தை காட்டிய அயர்லாந்து – 1 ரன்னில் தனித்துவமான உலக சாதனை

அதாவது 2010க்குப்பின் தொடர்ந்து விராட் கோலி மட்டுமே 3வது இடத்தில் கடந்த 13 வருடங்களில் 8 சதங்கள் அடித்துள்ளார். தற்போது அவரை தவிர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 ரன்கள் கடந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய கேரியரில் மொத்தமாக 3வது இடத்தில் இதுவரை 11 இன்னிங்ஸில் 9, 88, 65, 54, 63, 44, 80, 49, 82, 3, 105 என 6 அரை சதமும் 1 சதமும் அடித்து தொடர்ந்து மலைக்கு வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவரது அதிரடியால் சற்று முன் வரை இந்தியா 34 ஓவரில் 235/2 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement