இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 14 டெஸ்ட் போட்டிகள், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2015-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இதுவரை 133 போட்டிகளில் விளையாடியது மட்டுமின்றி தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் :
தனது கரியரின் ஆரம்பகட்டத்தில் மூன்று வகையான இந்திய அணியிலும் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓரங்காட்டப்பட்டார். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இருப்பினும் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் 2023 உலக கோப்பை தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக பெரிய ரன் குவிப்பை வழங்கி வந்தார். அதனால் அவரை ஒருநாள் போட்டிகளுக்களில் 4-ஆம் இடத்திற்கான நிரந்தர வீரராகவும் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகள் கழித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு டி20-களிலும் தன்னால் கழக முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக மீண்டும் அவர் டி20 போட்டிகளுக்கு திரும்பலாம் என்று பேசப்பட்டு வந்தது.
இவ்வேளையில் தற்போது டி20 கிரிக்கெட் மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி அதற்கடுத்து நடைபெறயிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஒருவேளை ஐ.பி.எல் ஆடியிருந்தா கெடச்சிருக்கோமோ.. தனது மகனின் வாய்ப்பு குறித்து – அபிமன்யு தந்தை வருத்தம்
ஏனெனில் இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் பெரியளவில் சோபிக்காததால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் அனுபவம் வாய்ந்த வீரரான ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னர் டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான இந்திய அணியிலும் அவர் விளையாடப்போகிறார் என்று கூறப்படுகிறது.



